சம வேலைக்கு சம ஊதியம்: தமிழகஅரசை வலியுறுத்தி 2-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் -பல ஆசிரியைகள் மயக்கம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை அமல்படுத்தும்படி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை பள்ளி கல்வி வளாகமான டிபிஐ வளாகத்தில் நேற்று முதன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், பல ஆசிரியைகள் மயக்கமடைந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஆசிரியைகளின் போராட்டத்தின்போது, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததுடன்,. திமுக தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தார். அதை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், திமுக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர், ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து உள்ளனர். தங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களும், தாங்களும் ஒரே மாதிரியான வேலையையே செய்து வருகிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் அதிக மாறுபாடு உள்ளது என்று கூறி இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை கையில் எடுத்து போராடி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து கைக்குழந்தைகளுடனும் ஆசிரியைகள் பலர் வந்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு டி.பி.ஐ. வளாகத்திலேயே படுத்து உறங்கினார்கள். இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.
பலர் உணவு ஏதும் அருந்தாமல் தொடர்ந்து உண்ணாவிரதமம் இருந்து வருவதால், அவர்களின் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிவகங்கையைச் சேர்ந்த வசந்தி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிதா ஆகிய 2 ஆசிரியைகள் இன்று காலையில் திடீரென மயக்கம் அடைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்,.
இந்த போராட்டம் குறித்து கூறிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் *ராபர்ட்* , “கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர். எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்துள்ள்ளதாகவும், ஆனால் தமிழகஅரசு அதை கண்டுகொள்ளாமல் ஏமாற்றி வருகிறது" என்றும் குற்றம் சாட்டினார்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.