தினம் ஒரு கதை - முல்லா கதைகள்



அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார்.

ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது.

தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது அவர் வேண்டுமென்றே தம்மை இழிவுபடுத்தப் போட்ட திட்டம் என்று தவறாகக் கருதி கடுங்கோபம் கொண்ட தத்துவஞானி

ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து முல்லாவின் வீட்டுக் கதவில் முட்டாள் கழுதை என்று எழுதிவிட்டுச் சென்றார்.

சற்று நேரங்கழித்து வீடு திரும்பிய முல்லா தன் வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருந்த சொல்லைப் பார்த்து விட்டு அவர் மனைவியிடம் விசாரித்தார்.

நடந்த நிகழ்ச்சியை மனைவி அவரிடம் விளக்கிச் சொன்னார். உடனே முல்லா அந்தத் தத்துவ ஞானியின் வீட்டிற்குச் சென்றார்.

முல்லாவைக் கண்டதும் தத்துவ ஞானிக்கு அச்சமாக இருந்தது.

அவரைப் பற்றி முட்டாள் கழுதை என்று அவர் வீட்டுக் கதவில் எழுதியது கண்டு கோபம் கொண்டு முல்லா தம்மிடம் சண்டை போட வந்திருக்கிறாரோ என்று எண்ணினார்.

ஆனால் முல்லாவோ, ஞானியைப் பணிவுடன் வணங்கி " அறிஞர் பெருமானே, என் வீட்டுக் கதவில் தங்கள் பெயரை தாங்கள் எழுதிவிட்டு வந்திருப்பதைக் கண்டு தாங்கள் வந்து சென்ற விஷயத்தை அறிந்து கொண்டேன்.

மன்னிக்க வேண்டும், எதிர்பாராத அலுவல் காரணமாக தாங்கள் வந்த சமயம் வீட்டில் இருக்க முடியாமல் போய்விட்டது" என்றார்.

தன்னையே முட்டாள் கழுதை ஆக்கிவிட்ட முல்லாவின் அறிவுச் சாதுரியத்தைக் கண்டு த்ததுவ ஞானி வாயடைத்துப் போய்விட்டார்.

Post a Comment

0 Comments