பழங்குடியின மக்களின் வாழ்விற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மறைவு பேரதிர்ச்சி. நீதித்துறையும், அரசாங்களும் மக்களுக்கானதாய் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையை சுயபரிசோதனை செய்து கொள்ள ஓர் வாய்ப்பு. UAPA சட்டத்தையும், TADA, POTA போல நீக்கி விட மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமும் கூட.
ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஸ்டேன் சுவாமி, தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பழங்குடியின மக்களின் வாழ்வை உள்வாங்கிக் கொண்ட அவர், ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களோடு மக்களாக கலந்து, அவர்களின் உரிமைகளுக்காக போராடத் துவங்கினார்.
1997இல் உச்சநீதிமன்றம் சமத்தா வழக்கில் பழங்குடியின மக்களின் நிலங்களை யாரும் பறிக்க முடியாத வகையில் சீர்திருத்தம் கொண்டுவந்தது. 2013 இல் ஜார்க்கண்ட் அரசு அந்த உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து பழங்குடி மக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தினார். 2006இல் வன உரிமைச் சட்டத்தில் ஏன் நடுவண் அரசு பல உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பழங்குடி மக்களின் பாதுகாவலனாகவும், போராளியாகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் நச்சல்பாரிகளோடும், மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகான் கலவர நிகழ்வுகளுக்கு காரணமான அறிவுஜீவிகளோடும் தொடர்பிருந்ததாக, தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
பார்கின்சன் (Parkinson's Disease) நோயால் பாதிக்கப்பட்டவரான ஸ்டேன் சுவாமி, கை நடுக்கத்தால் தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழல் (Straw) வேண்டும் என்று கேட்டபோது கூட அதை வழங்க நீதி மன்றம் ஆணையிடாதது ஏன் என்பது மனித குலத்தின் மனசாட்சியை உருக்கும் கேள்வி. 84 வயதான அவருக்கு தொடர்ந்து ஜாமீனும் மறுக்கப்பட்டது. கரோனா நோயாலும் பாதிக்கப்பட்ட அவர் ஜூலை 5 இல், தானே நிரந்தர ஜாமீனை வாங்கிக்கொண்டு, தான் மிகவும் நேசித்த ஜார்கண்டின் மரங்களடர்ந்த காடுகளிலும், பழங்குடி மனிதர்களின் மனங்களிலும் நிரந்தர நிம்மதியை தேடிக்கொண்டார்.
NCRB (தேசிய குற்ற ஆவண காப்பகம்) இன் கணக்குப்படி 2019 வரை 95% UAPA சட்டத்தின்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவற்றில் பலர் விசாரணைக் கைதிகளாகவே வாழ்நாளை இழந்துவிடுகின்றனர் என்றும் கூறுகிறது.29% பேரின் குற்றங்கள் மட்டுமே நீருபிக்கப்படுகின்றன.
POTA, TADA போல UAPA (Unlawful Activities Prevention Act- தேசிய பயங்கரவாத தடுப்புச் சட்டம்) ஐயும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டமிது.
நீதித்துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவேதாடு மட்டுமல்லாமல், பணியிடங்களையும் அதிகப்படுத்தி வழக்குகளை தேங்காமல் செய்து, விரைவில் நீதி வழங்கி சட்டத்தின் ஆட்சியை சரியாய் நிலை நாட்டுவதும் ஓர் ஜனநாயக அரசின் ஆகப் பெருங்கடமை.
அவரின் மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் விசாரணைக்குட்பட்டவை என்றாலும் ஓர் உறிஞ்சி குழல் கூட அவருக்கு கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்ட நீதியும், அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின் மனசாட்சியும் கூட கூட்டுக்
குற்றவாளிகள்தான்...
- Dr.ச. தெட்சிணாமூர்த்தி
9159969415
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.