*‘’நம்பிக்கைதான்.."*
……………………………............
நம் எல்லோருடைய வாழ்க்கையையும் நம்பிக்கை என்னும் சக்கரத்தை வைத்தே சுழன்று கொண்டு இருக்கிறது. நம்பிக்கை சிறிதேனும் இல்லாத நிலை ஒருவருக்கு வந்து விட்டால் அவர் தோல்வியை நோக்கி செல்கிறார் என்பது நிச்சயம்.
நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை..
நாளை நம் கவலைகள் யாவும் தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில்தான் பலரும் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்துவிட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டு இருந்ததைக் கண்டார்.
அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில்தான் இறந்தார், மறுபடியும் கடலுக்குள் போகிறாயே? என்று கேட்டார் அவர்.
அதனால் என்ன, எனது தாத்தாகூட கடலில் மீன் பிடித்தபோதுதான் இறந்தார், அதன் பின்னும் எனது தந்தை மீன் பிடிக்கச் செல்ல வில்லையா?
சரி, உங்கள் தாத்தா எப்படி இறந்தார்? எனக் கேட்டார் மீனவர் மகன்.
படுக்கையில் தூங்கும் போது அவரது உயிர் பிரிந்தது. உங்களின் அப்பா எப்படி இறந்தார்? என்று மீனவர் மகன் மீண்டும் கேட்க, அவரும் அப்படித்தான். படுக்கையில் தூக்கத்தில் இறந்தார் என்றார்.
ஐயா பெரியவரே, உங்களின் தாத்தாவும் சரி, அப்பாவும் சரி படுக்கையிலே இறந்து விட்டனர், அதன் பிறகு எப்படி நீங்கள் துணிச்சலாகத் தூங்கப் போகிறீர்கள்? என்று கேள்வியால் மடக்கினார் மீனவர் மகன்.
நாளை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார நினையுங்கள் எவ்வளவு துயரமான சூழ்நிலையில் இருந்தாலும். இரவுக்குப் பின் விடிந்து தானே ஆக வேண்டும்? புயலுக்குப் பின் அமைதி தானே நிலவும்?
இன்று பணப் பற்றாக்குறை, அவமானம், உறவுகளில் விரிசல், அமைதி இல்லாத மனம் என்று பலவிதமான துயரங்களில் நீங்கள் அவதியுறலாம். தைரியமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. தினமும் நம்பிக்கையோடு வாழ்வைத் தொடங்குவோம். வாழ்க்கை கூடிய சீக்கிரம் உங்களுக்கு வசப்படும். வசந்தம் உங்கள் வாழ்க்கையில் வந்தே தீரும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.