தினம் ஒரு கதை -எளிதாக மற்றவர் மீது குறை கூற முற்பட வேண்டாம்.

 மற்றவர் மீது குறை கூற 

.......................................

     மற்றவரிடம் குறை கூறும் எண்ணம் பலருக்கு கூடப் பிறந்தது. குறை சொல்ல எண்ணுபவர்கள் தம்மிடமும் பல குறைகள் உள்ளன என்பதை உணர்வது இல்லை.


    அதை ஒருவர் உணரத் தொடங்கிவிட்டால், பிறரைக் குறை கூறுவதை நிறுத்தி விடுவர். நம்மிடம் இருக்கும் குறைகள், பிறருடைய குறைகளைப் பார்க்கிலும் மிகுதியாக இருக்கலாம். 


     ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. 


     அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


     சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது

. வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,


    "பாருங்கள்! 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.


    நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து,


     "என்ன சொல்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றம் இல்லையா?"என்று கேட்டார்.


     "ஐயா! என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.


      பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுத்துவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டு இருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். 


      இப்போது பாருங்கள்! என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.


     ஒருவரைச் சுட்டிக் காட்டுவதற்கு நாம் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்துகிறோம். அந்த விரல் மற்றவரைச் சுட்டிக் காட்டும்பொழுது மீதியுள்ள நான்கு விரல்களும் நம்மை நோக்கியே உள்ளன.


       அவை நமக்கு மறை முகமாகச் சுட்டுவது என்ன?மற்றவரிடம் ஒரு குறை என்றால், நம்மிடம் நான்கு குறைகள் உள்ளன என்பதைத்தான். 


     எனவே, எளிதாக மற்றவர் மீது குறை கூற முற்பட வேண்டாம்.

Post a Comment

0 Comments