தினம் ஒரு கதை - மன அழுத்தம்

*மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் தவிர்ப்பது எப்படி?* 
.......................................
     ஒரு ஊரில் ஒரு பங்குத்தரகர் இருந்தார். அவர் துரதிஷ்டவசமாக அவருடைய அனைத்து பொருளாதாரத்தையும் இழந்து, மிகவும் ஒரு மோசமான நிலைக்கு வந்து விட்டார்.

     அதிலிருந்து அவர் மீள்வதற்காக, சுயமாக பல வழிகளில் முயன்றார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. மற்றவர்கள் அவரை மன அமைதி கொள்ளுங்கள் என வற்புறுத்தியும் அவரால் மன அமைதி ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

     கடைசியாக ஒரு மடாலயத்திற்கு சென்றார். அங்கு சென்றும் அவரால் தியானத்தில் ஈடுபட முடியவில்லை. மடாலயத்திலும் அவர் எதை எதிர் நோக்கிச் சென்றாரோ, அந்த மன அமைதி கிடைக்கவில்லை.

     கடைசியாக  மடாலயத்தை விட்டும் அதிருப்தியுடன் வெளியேறினார். அவர் வெளியேறும் பொழுது அந்த  மடாலயத்தின் தலைவர் கூறிய வார்த்தை, இவரிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.

     அவர் *தரையில் படுத்து உறங்குபவர் எப்பொழுதும்   படுக்கையில் இருந்து கீழே விழுவது இல்லை* என்றார்.

     இங்கு தரையில் படுத்து உறங்குவது என சொல்லப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் அவருடைய மனதில் பணிவுடைமையை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

       பணிவாக இருப்பவரிடம், வெளியில் இருந்து ஏற்படும் காயங்கள் ஏற்படாது. பணத்தை இழந்து விட்டால் அவர் அவருடைய தன்மானத்தை இழந்து விட்டதாக கருதுகிறார்.

     இங்கு பங்கு தரகர் பணத்தை மட்டும் தான் இழந்தார். ஆனால் அது ஒரு மிகப்பெரிய இழப்பு அல்ல. ஆனால் இந்த சமுதாயம் அவரை தரம் தாழ்ந்து விட்டதாக கருதுமே என அவராக எண்ணிக் கொள்வது தான் அவருடைய மிகப்பெரிய பாதிப்பு.

      நம்மிடம் *நான்* என்ற எண்ணம், அதாவது பணிவின்மை (ஈகோ) எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு உயரத்திலிருந்து அந்த மனிதன் பிறரால் தாக்கப்படும் பொழுது அல்லது ஒரு இழப்பு ஏற்படும் போதோ கீழே விழுகிறான்.

     ஆகையால் *பணிவு என்பது, எப்பொழுதுமே மன அழுத்தம், பதற்றம், கவலை, தூக்கமின்மை இவை அனைத்தையும் போக்கும் ஒரு அருமருந்து* என்பதை நமது வள்ளுவர் பெருந்தகை மிக அழகாக சுட்டிக்காட்டி உள்ளார்.

 *பணி உடையன் இன்சொலன் ஆதல் ஒருவருக்கு அணி அல்ல மற்ற பிற* .

வணக்கம் உடையவனாகவும் இனிய சொல் வழங்குபவனாகவும் இருத்தலே ஒருவருக்கு அணிகலனாகும் (மற்றவை எதுவும் அணிகள் அல்ல அதாவது பாதுகாப்பான கேடயமாக இருக்காது)

 *மன அமைதி வேண்டுவோர் பணிவாக இருக்க கற்றலே மிகச் சிறந்த வழியாகும்*

Post a Comment

0 Comments