ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, அதில் சுமார் 24,000 பேர் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, தேர்ச்சிபெற்ற நபர்களை புதியவர்களுடன் மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது நியாயமற்றது.

அரசாணை 252: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு 2012-ம் ஆண்டு வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், 2013-ல் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.

அரசாணை எண் 252-ன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அப்போதும் அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. திடீரென அரசாணை 71 அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறை புகுத்தப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை.

நியாயமற்ற செயல்: இதற்கிடையே, புதிய அரசாணை 149ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிப்பது, நியாயமற்றது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்ற தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments