ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு வில்வித்தை கற்க வேண்டும் என்று ஆசை. கற்பது மட்டும் இல்லை இந்த உலகத்திலேயே வில்வித்தையில் தன்னை விஞ்சிய ஆள் யாரும் இருக்கக்கூடாது இதுதான் அவன் ஆசை.
பக்கத்தில் உள்ள காட்டில் ஒரு குரு இருந்தார் வில்வித்தையில் ரொம்ப கெட்டிக்காரர். நூறு அடி தூரத்தில் ஒரு சின்ன இலையை குறிவைத்து அம்பை விடுவார். அந்த இலையை சரியாக துளைத்துக் கொண்டு போய்விடும். அவ்வளவு கெட்டிக்காரர். அவரிடம் இவன் போனான் என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். வில்வித்தை கற்றுக் கொடுங்கள் என்றான்.
அவர் சொன்னார் முதலில் கண்களை மூடாமல் உன்னிப்பாக பார்க்க கற்றுக் கொள். அதன் பிறகு இங்கே வா என்றார். இவன் திரும்பி வீட்டுக்கு போனான். வீட்டிலிருந்த தறியில் செல்கின்ற கரும்புகளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டான். இந்த பயிற்சி முடிய இரண்டு வருடம் ஆனது. அதன் பிறகு அந்த குருவைத் தேடிப் போனான். கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றான்.
சரி இப்போதுதான் நீ முதல் படியிலேயே இருக்கிறாய். இனிமேல் பார்வையை கூர்மை படுத்திக்கொள். கண்ணுக்குத் தெரியாத பொருள் தெரிய வேண்டும். சின்ன பொருள் கூட உன் கண்ணுக்கு பெரிதாக தெரிய வேண்டும். பழக்கப்படுத்திக் கொண்டு அதன் பிறகு என்னை வந்து பார் என்றார். சரி என்று சொல்லி அவன் வீட்டுக்கு போனான். தோட்டத்திலுள்ள ஒரு கண்ணுக்குத் தெரியாத சின்ன பூச்சியை எடுத்து ஒரு புல்லில் வைத்தான். அதை வீட்டுக்கு கொண்டு வந்து ஜன்னலில் தொங்கவிட்டான். தினமும் பூச்சியை உற்றுப் பார்க்க ஆரம்பித்தான். முதலில் பூச்சி சரியாக தெரியவில்லை. நாளாக பெரிதாகியது நன்றாக பார்க்க முடிந்தது. அதன் பிறகு குருவிடம் வந்தான். கொஞ்ச நாளில் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டான். வில்வித்தையில் நிபுணன் ஆகிவிட்டான். முன்னூறு அடி தூரத்தில் உள்ள சிறிய இலையை கூட சரியாக குறி வைத்து அடித்து அம்பாலே துளை போட்டான்.
ஒரு கோப்பையிலே தண்ணீரை நிரப்பி அதை வலது முழங்கையில் வைத்து அப்படியே வைத்துக் கொண்டு அம்பை விடுவான். குறி தவறாது கோப்பையில் உள்ள தண்ணீரும் சிந்தாது.
இனிமே தான் சாதிக்க வேண்டியது எதுவும் கிடையாது. இருந்தாலும் அவனை மிஞ்ச ஆள் இருக்கக்கூடாது என்பதே அவன் குறிக்கோள். அதற்கு தடையாக ஒருத்தர் இருக்கிறார். அவர்தான் கற்றுக் கொடுத்த குரு. அவர் இருக்கக் கூடாது என்று நினைத்தான். அவருக்கு தெரியாமல் ஒரு அம்பை எடுத்து விட்டான். ஆனால் அந்த குரு கண்ணிமைக்கும் நேரத்திலே பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து அம்பைத் தட்டிவிட்டார்.
அதற்காக சீடன் பேரில் அவர் கோபப்படவில்லை. அவனை கூப்பிட்டு சொன்னார். இதோ பாரு எனக்கு தெரிந்ததை எல்லாம் உனக்கு கற்றுக் கொடுத்து விட்டேன். என்னை விட பெரிய குரு ஒருத்தர் இருக்கிறார். அது அந்த மலை உச்சியில் இருக்கிறார். அவரிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். உடனே இவன் அந்த பெரிய குருவிடம் போனான்.
நான் வில்வித்தையில் கெட்டிக்காரன்தானா? என்று எனக்கு தெரிய வேண்டும் என்றான்.
அந்த குரு கேட்டார் சரி அதை தெரிந்து கொள்ளலாம். அப்படி என்றால் உன்னாலே வில் அம்பு இது இரண்டும் இல்லாமலே குறி வைக்க முடியுமா? என்று கேட்டார்
இப்படி கேட்டு விட்டு அவனை ஒரு மலை உச்சிக்கு கொண்டுபோய் நிறுத்தினார். எட்டிப் பார்த்தால் கீழே பயங்கரமான பாதாளம் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அப்படியே தலையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்தான்.
இப்போது குரு சிரித்துக் கொண்டே உன் வில்வித்தை என்ன ஆனது என்று பார் என்றார்.
உங்கள் வில் எங்கே என்றான்.
வில்லா? அது எதுக்கு? வில்லும் அம்பும் தேவைப்பட்டால் நீ இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறாய் என்பது அர்த்தம். உண்மையான வில் வித்தைக்கு அது இரண்டும் தேவை இல்லை என்றார். ஒன்பது ஆண்டுகள் அவரிடம் இருந்தான். அதற்குப் பிறகு ஆணவம் அவனிடம் இருக்கவில்லை. பக்குவம் அடைந்து விட்டான்.பழைய குரு மறுபடியும் இவனை வந்து பார்த்தார். நீ இப்போது நிபுணன் ஆகி விட்டாய் உன் கால்களை தொடுவதற்கு கூட நான் அருகதை இல்லாதவன் என்றார்.
யாராவது வில்வித்தையை பற்றி கேட்டால் அவன் சொல்லுவான் பேச்சின் உச்சகட்டம் மௌனம். செயலின் உச்சகட்டம் செயலின்மை. வில்வித்தையின் உச்சகட்டம் வில்லை எய்யாமல் இருப்பதுதான் என்பான்.அதன் பிறகுதான் அவன் புகழ் எங்கும் பரவியது.
ஒரு நாள் ஒரு நண்பன் வீட்டுக்கு போய் இருக்கிறான்.அவனுக்கு பழக்கப்பட்ட பொருள் ஒன்று இருந்தது அதை பார்த்தான். அது என்ன என்பதை சரியாக நினைவுக்கு வரவில்லை. யோசித்து பார்த்து விட்டு அந்த நண்பனையே கேட்டான். அது என்ன? அதை ஏன் இங்கு வைத்திருக்கிறாய்? என்று கேட்டிருக்கிறான்.
அதற்கு அந்த நண்பன் சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறான். நீ வில்வித்தையில் சிறந்தவன் ஆகிவிட்டாய். அதனால் அது என்ன என்பதை நீ மறந்து விட்டாய். அதுதான் வில்லும் அம்பும் என்றான்.
*நீதி*
இதுதான் நிபுணத்துவத்தின் உச்சநிலை.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.