தினம் ஒரு கதை - நம்மால் முடிந்த அளவுக்கு சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பகிர்வோம்

    ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம். கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதில் நிறைய பூக்கள்... கனிகள்... பறவைகள்...

 ஒரு சின்ன பையன் அந்த மரத்தடியில் வந்து விளையாடுவது வழக்கம். மரத்துக்கு அந்த பையன் பேரில் ஒரு பாசம் உண்டாக ஆரம்பித்துவிட்டது. பையன் அந்த மரத்திலுள்ள பூக்களை பறிக்க வேண்டும். பழங்களைப் பறிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காகவே அந்த மரம் தன்னுடைய கிளைகளை வளைத்து அவனுக்கு எட்டுகிற அளவுக்கு தலை சாய்த்தது. 

பையன் பூக்களைப் பறிப்பதில் சந்தோஷப்பட்டான் மரம் அன்பின் அடையாளம் அதனால் கொடுப்பதில்  சந்தோஷப்பட்டது. மனிதன் ஆணவத்தின் அடையாளம் அவன் பறிப்பதில் சந்தோஷப்பட்டான்.

பையன் வளர்ந்தான்.மரத்தின் அடியில் படுத்து தூங்கினான். பூக்களை பறித்து மலர் கிரீடம் பண்ணி தலையில் சூடிக்கொண்டான். பழங்களை பறித்துச் சாப்பிட்டான். அதைப் பார்த்து அந்த மரம் சந்தோஷப்பட்டது.

 கொஞ்ச காலம் கழிந்தது. பையன் இன்னும் கொஞ்சம் பெரியவனானான். அந்த மரத்தில் ஏறி கிளையில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆட ஆரம்பித்தான். அவனுக்கு சவுகரியத்தை கொடுப்பதில் மரத்துக்கு  ஆனந்தம். அந்த மரத்துக்கு அசவுகரியத்தை கொடுப்பதிலே இவனுக்கு ஆனந்தம். இது அன்புக்கும் ஆணவத்திற்கும் உள்ள வித்தியாசம்.

 பையன் இன்னும் கொஞ்சம் வளர்ந்தான். அவனுக்கு கடமை இலட்சியம் எல்லாம் வந்து சேர்ந்தன. படித்து பரீட்சை எழுதி பாஸ் ஆக வேண்டி இருந்தது. அதனால் மரத்திடம் அவன் வருவதில்லை. ஆனால் மரம் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. இவன் உலக விடயங்களில் மூழ்கிவிட்டான்.

தற்செயலாக ஒருநாள் அந்த பக்கமாக போனான். மரம் அவனை பார்த்து மறந்து விட்டாயா? நான் உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றது.

 இவன் பார்த்தான் நீ என்ன வைத்திருக்கிறாய்? நான் உன்னிடம் ஏன் வரவேண்டும்? உன்னிடம் பணம் இருக்கிறதா? ஏனென்றால் நான் இப்போது பணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றான். 

உனக்கு பணம்தானே வேண்டும் என்னுடைய பழங்களை பறித்து அதை விற்பனை செய். பணம் கிடைக்கும் என்றது மரம். உடனே இவன் மரத்தில் ஏறினான். பழங்களைப் பறித்து காய்களையும் பறித்துவிட்டான். தன்னுடைய கிளைகள் உடைந்ததற்குகூட அந்த மரம் கவலைப்படவில்லை. சந்தோஷப்பட்டது.

 இவன் பழங்களைப் பொறுக்கி கொண்டு அந்த மரத்திற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் போய்விட்டான். அதன் பிறகு அந்த பக்கம் வரவில்லை. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தான்.

 மறுபடியும் அவன் வரவில்லையே என்று வருத்தம் கொண்டது மரம். பல வருடம் கழித்து வந்தான். வா மகனே வந்து என்னைக் கட்டி பிடித்துக் கொள் என்றது அந்த மரம்.

 நான் என்ன இன்னும் சின்னப் பிள்ளையா? வந்து கட்டி பிடிப்பதற்கு என்றான் அவன். நான் இப்போது ஒரு வீடு கட்டப்போகிறேன். எனக்கு உதவ முடியுமா? என்றான்.

 என்னுடைய கிளைகளை வெட்டிக் கொள் என்றது மரம். கொஞ்ச நேரத்தில் மரத்தை மொட்டை அடித்து விட்டான். கொஞ்சம் காலம் கழித்து அந்த மனிதன் வயதாகி கிழவனாகி வந்தான்.நான் தூர தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். நான் பிரயாணம் பண்ண ஒரு படகு தேவை அதற்கு முன்னால் உதவ முடியுமா? என்றான்.

 அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. என் அடி மரத்தை வெட்டிக் கொள். மரத்தை வெட்டினான். படகு செய்தான். போய் விட்டான். இனிமேல் திரும்பி வருவானா? வரமாட்டானா? தெரியாது. ஆனால் இந்த அடிமரம் அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்.

 ஏனென்றால் மரம் அன்பின் அடையாளம்! அவன் ஆணவத்தின் அடையாளம்! இப்படி ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார் ஒரு பேரறிஞர்.

அதாவது அன்பு கொடுப்பதற்கு தான் ஆசைப்படும்.ஆணவம் எப்போதும் வாங்குவதற்கே ஆசைப்படும். நம்மால் முடிந்த அளவுக்கு சுற்றி உள்ளவர்களிடம் அன்பை பகிர்வோம். 🙏

Post a Comment

0 Comments