தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பெண்களுக்கான 30% இடங்களை முன்கூட்டியே எடுத்துவைத்துவிட்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சதீஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதாவது, 100 சதவிகித இடங்களை மெரிட் மற்றும் சமூக ஒதுக்கீடுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும்போது, ஏற்கனவே 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இருந்துவிட்டால், தனியாக 30 சதவிகிதம் ஒதுக்க அவசியமில்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவிகிதத்திற்கும் கீழ், பெண்களின் பிரதிந்தித்துவம் இருக்கும்பட்சத்தில் 30% ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி, நியமனத்தின்போது முதலில் பெண்களுக்கான 30 சதவிகிதம் இடங்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, அதன் பிறகு உள்ள 70 சதவிகித இடங்கள் இருபாலருக்கும் ஒதுக்கப்படுகின்றன. Horizontal இடஒதுக்கீடு முறையான பெண்களுக்கான ஒதுக்கீடு, Vertical இடஒதுக்கீடு முறையான சமூக ஒதுக்கீடு போல் ஒதுக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்ட விதிகளிலும், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இனிவரும் பணி நியமனங்களில் நீதிமன்ற அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நியமனம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.