தீமைகளை மறந்து நன்மைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்

 ஒரு கிராமத்தில் ஒரு ஆள் இருந்தார் . 


விவசாயம்தான் அவருக்கு தொழில். 


அவருக்கு ஒரே பிள்ளை. 


ஒரே பிள்ளை என்பதினாலே ரொம்ப பிரியம்.


ஒரு நாள் அந்த பிள்ளையை ஒரு பாம்பு கடித்து விட்டது. 

அவன் இறந்து விட்டான். 

மகனை இழந்து விட்டோம் என்று தெரிந்ததும் அவருக்கு பயங்கர கோபம் வந்தது.  


உடனே ஒரு கோடாரியை கையில் எடுத்துக் கொண்டு அந்த பாம்பை தேடி பிடித்து அதன் மீது ஓங்கி ஒரு போடு போட்டார். 


அவ்வளவுதான் அந்தப் பாம்பின்  வால் துண்டாகிவிட்டது. 


வால் மட்டும் அப்படியே துண்டாகிக் கிடக்க பாம்பு ஓடி விட்டது.


அதன் பிறகு இவருக்கு ஒரு பயம் உண்டாகிவிட்டது. 

அடிபட்ட பாம்பு நம்மை பழிவாங்காமல் விடுமோ? 

 

இப்படி பயந்து கொண்டு எத்தனை நாளைக்குத்தான் இருப்பது? 

அந்தப் பாம்போடு பேசி சமாதானம் செய்து கொள்வோம் என்று முடிவு செய்தார்.


உடனே ஒரு கோப்பையில் பால் எடுத்துக் கொண்டு போனான். 

பாம்பு புற்றுக்கு பக்கத்தில் வைத்தார். 

 

பாம்பு வெளியிலே வந்தது. 

இவர் விவரத்தை சொன்னார்.


 அப்போது அந்த பாம்பு சொல்லியது " இதோ பார் இனி நாம் நண்பர்களாக இருப்பது என்பது முடியாத காரியம். 

நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் அல்லது உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னுடைய அறுபட்ட வால்தான் ஞாபகத்துக்கு வரும். 

அதுபோல நீ என்னைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இறந்து போன உன்னுடைய மகன் நினைப்புதான் உனக்கு வரும். 

 

ஒருவர் நமக்கு செய்கிற தீங்கு நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. 

பழிவாங்குகிற சுபாவம் தலைதூக்கி நிற்கிறது" என்று சொல்லிவிட்டு அந்தப் பாம்பு புற்றுக்குள் போய்விட்டது.


பொதுவாக உலக இயல்பு இதுதான் மற்றவர்கள் நமக்குச் செய்த நல்லதை எல்லாம் நாம் சுலபமாக மறந்து விடுகிறோம். 

ஆனால் அவர்கள் செய்த தீமைகள் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது அது மட்டுமில்லாமல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மனம் காத்துக் கொண்டிருக்கிறது. 


இதனால் என்ன கிடைக்கப் போகிறது? 

மனதில் அமைதி இல்லை. எப்போதும் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


ஆகையால் வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் மன அமைதியும் வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்தவர்கள் செய்த தீமைகளை மறந்துவிட வேண்டும். நன்மைகளை மறந்து விடாமல் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments