பொதுத்தேர்வில் ஜெயிப்பது எப்படி?

பொதுத்தேர்வில் ஜெயிப்பது எப்படி?

"கடின உழைப்பு, எழுத்துப்பயிற்சி இருந்தால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்”

பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அதை எளிதாக எதிர்கொள்வது குறித்து நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களின் ஆலோசனைகள்: 

1. ஒவ்வொரு பத்தியாக (பாராகிராப்) பிரித்து படித்தால் பெரிய கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம். முதலில் கேள்விகளை முழுமையாக புரிந்து கொண்டு, விடை அளிக்க வேண்டும். தினமும் "டைம் டேபிள்' தயாரித்து ஒவ்வொரு பாடமாக படிக்க வேண்டும். அதை தவறாமல் எழுதி பார்த்தால் மனதில் பதியும். தேர்வு அறைக்கு செல்லும் போது பதற்றத்தை தவிர்க்க வேண்டும். தேர்வின் போது மற்றவர்களை வேடிக்கை பார்க்கக்கூடாது.

2. சூத்திரங்களை (Formulas) எழுதி, தினமும் பார்வையில் படும்படி ஒரு இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை பார்த்து புரிந்து கொண்டால் மனதில் பதியும். சூரத்திரங்களை மாற்றி எழுதிவிட கூடாது. கடினமாக கருதும் கணக்குகளை தினமும் செய்து பார்க்க வேண்டும். தினமலர் மாதிரி வினா விடை, பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகத்தில் உள்ள கேள்விகளை படித்தால் 80 மதிப்பெண்கள் நிச்சயம். கூட்டு தொடர் வரிசை, அளவியலுக்கு உள்ள சூத்திரங்களை அடிக்கடி எழுதிப்பார்க்க வேண்டும். நன்கு தெரிந்த கணக்குகளை முதலில் செய்ய வேண்டும். தேர்வு அறைக்குள் வந்த பின், பென்சிலை கூர் தீட்டுவதை தவிர்க்க வேண்டும். 

3. தேர்வுக்கு தயாராகும் போது எழுதிப்பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் கண்டிப்பாக பதில் எழுத வேண்டும்; எதையும் விடக்கூடாது. அறிவியல் மிகவும் எளிதான பாடம். அதை புரிந்து கொண்டால் கடினம் என்ற மாயை விலகிவிடும். ஒரு மதிப்பெண் வினாக்களை 15 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். தெரிந்த பெரிய கேள்விகளை ஒரு மணி நேரத்தில் முடித்து, பிறகு மற்றவற்றை எழுத வேண்டும். திருப்பி பார்க்க 15 நிமிடம் ஒதுக்க வேண்டும்.

4. மாணவர்களே வினாத்தாள் தயாரித்து பதில் அளித்து பழகினால், வகுப்பில் 90 மதிப்பெண் பெறுவோர் நூற்றுக்கு நூறு எடுக்கலாம்; 60 மதிப்பெண் பெறுவோருக்கு 80 உறுதி. இதே முறையில் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம். கேள்விகளை புரிந்து பதில் அளிக்க வேண்டும். எழுத்து தெளிவாக இருக்க வேண்டும். முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். அடித்தல் திருத்தல் இருக்க கூடாது.  

5. ஒரு மதிப்பெண் கேள்வி, பெரிய வினாக்களுக்கு எப்படி பதில் அளிக்கலாம் என புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு சுருக்கமாக பதில் அளித்தால் போதும். தேவைக்கு அதிகமாக எழுதினாலும் மதிப்பெண் கிடையாது. கணிதத்திற்கு அடிப்படையான சூரத்திரங்களை நினைவில் வைத்து கொண்டால், அதிக மதிப்பெண் பெறலாம். சந்தேகமான கணக்குகளை, பிறகு எழுத வேண்டும்.

6. பாடங்களை அடுத்து உள்ள பயிற்சி கேள்விகளை முழுமையாக படித்தாலே 30 மதிப்பெண் நிச்சயம். பாடத்தில் உள்ள கேள்விகளை முழுமையாக எழுதி பார்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம். தேர்வின் போது இரவில் அதிக நேரம் கண் விழித்து படிக்க கூடாது; அது தேர்வில் சோர்வை உருவாக்கி விடும். புரிந்து படித்தால் வெற்றி எளிது. வரைபடங்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அதற்குரிய பாகங்களின் பெயரை, நினைவில் வைத்திருக்க வேண்டும்.

7. பாடங்களை படிக்கும் போது, படங்களின் விளக்கத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேவையான அளவில் பதில் அளித்தால் போதும். கட்டாய கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பகுதி வாரியாக கேள்வி எண்ணை எழுதி, வரிசையாக பதில் அளிக்க வேண்டும். மாற்றி, மாற்றி பதில் எழுத கூடாது. கையெழுத்தில் கவனம் செலுத்த வேண்டும். வரைபடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

8. புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை தினமும் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். இலக்கண பயிற்சியை படித்தால் 20 மதிப்பெண் நிச்சயம். ஒவ்வொரு பாடத்தையும் படித்த பின், எழுதிப்பார்த்து சுய பரிசோதனை செய்ய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான தினமலர் மாதிரி வினா விடை, பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகத்தை எழுதிப்பார்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

9. தேர்வில் பதில் அளிக்கும் போது முக்கிய குறிப்புகளை மட்டும் எழுதினால் போதும். வழ, வழ பதில்கள் கூடாது. தலைப்புகளை அடிக்கோடு இட வேண்டும். வரைபடங்களுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள கூடாது. சமன்பாடு உள்ள கேள்விகளை தேர்வு செய்து எழுதினால், மற்ற கேள்விகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். கேள்வி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதை முன்பே திட்டமிட வேண்டும்.

10. கடினமாக கருதும் பாடங்களை காலை நேரத்தில் படிக்க வேண்டும். தேர்வில் சரியான பதில்களை எழுத வேண்டும். பாடங்களை முழுமையாக படித்த பின், நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிப்பார்க்க வேண்டும். இதில் சோம்பேறித்தனம் கூடாது. எழுத்து பயிற்சி தேர்வில் கைகொடுக்கும்.

11. மதிப்பெண் விழுக்காடு முறைப்படி, கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். வரைபடங்களுக்கு பாகங்களை குறிக்க வேண்டும். இதில் தவறினால் முழு மதிப்பெண் கிடைக்காது. வரைபடங்களில் தவறு ஏற்படாதவாறு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். படங்களை மிகவும் அழுத்தமாக வரைய வேண்டியதில்லை. போதிய இடைவெளி விட்டு எழுத வேண்டும்.

12. பெரிய கேள்விகளுக்கு விடை எழுதும் போது தேவையான இடங்களில் மட்டும், படம் வரைய வேண்டும். பதில் தெளிவாக சுருக்கமாக இருக்க வேண்டும். தேர்வில் கண்காணிக்க வரும் அதிகாரிகளை பற்றி சிந்தனையை ஓடவிடாமல், கவனத்துடன் எழுத வேண்டும். வரைபடங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்க வேண்டும்.

13. ஒரு மதிப்பெண் வினாக்கள் விடுபடாமல் பதில் எழுத வேண்டும். அதற்கு, பாடங்களை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். தேர்வுக்கு முன் திரும்ப, திரும்ப எழுதிப்பார்க்க வேண்டும். ஜியோமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். இல்லாதபட்சத்தில் தேவையற்ற பதற்றம் உருவாகும்.

Post a Comment

0 Comments