வீட்டுக் கடன் (Housing Loan) வாங்கியிருக்கீங்களா..80EE உங்களுக்கு 2 லட்சம் தவிர கூடுதல் 50000 கழிக்கும் வசதி - இன்று ஒரு Income tax தகவல்


 நமது சொந்த வீடு கனவை நனவாக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன்களை வாரி வழங்குகின்றன. இந்த கடனை வட்டியுடன் கணக்கிட்டு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்துகிறோம். இப்படி செலுத்தக்கூடிய தொகைக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை கிடைக்கிறது. 

அதனை பெறுவதற்கான நிபந்தனைகள் என்னென்ன? 

பிரிவு 80EE: வருமான வரி சட்டத்தின் பிரிவு 80EE, முதன்முறையாக வீடு வாங்கி இருப்பவர்கள் அதற்காக பெற்ற கடனுக்கு செலுத்தி வரும் வட்டி தொகைக்கு கூடுதலாக ரூ.50,000 வரிச் சலுகை வழங்குகிறது. 

பிரிவு 24B மற்றும் பிரிவு 80EEக்கு உள்ள வித்தியாசம்: 

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24B-இல் , வீட்டுக் கடனுக்கான வட்டி தொகைக்கு ஓர் நிதியாண்டில் ரூ.2 லட்சம் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உங்கள் வருமான வரி கணக்கில் பிரிவு 24B இல் ரூ. 2 லட்சத்தை வீட்டு கடன் வட்டித் தொகையாக கழித்த பின்னரும் உங்களால் கூடுதலாக ரூ.50,000 வரி விலக்கு பெற முடியும். இதற்கென உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவு தான் 80EE. 2013-14ஆம் நிதியாண்டில் தான் இந்த பிரிவு அமலுக்கு வந்தது. 2013-14 மற்றும் 2014-15ஆம் நிதியாண்டுகளில் மட்டுமே இது அமலில் இருந்தது. பின்னர் 2016-17இல் மீண்டும் கொண்டு வரப்பட்டது, அப்போது ஒரு ஆண்டுக்கு பெற கூடிய வரி விலக்கு ரூ.50,000 என மாற்றப்பட்டது. 

பிரிவு 80EE நிபந்தனைகள்: 

கடந்த ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2017 வரை பெற்ற வீட்டு கடன்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். முதன்முறையாக வாங்கிய வீட்டுக்கான கடனாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. அதாவது வீட்டுக்காக வங்கி கடன் வாங்கிய தேதியில், கடன் பெற்ற நபருக்கு வேறு எந்த வீட்டு மனையும் சொந்தமாக இருந்திருக்க கூடாது வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டக் கூடாது, கடன் வாங்கிய தொகை ரூ.35 லட்சத்தை தாண்டக் கூடாது. ஒரு நிதியாண்டில் இந்த வரிச் சலுகையை முழுமையாக பெறவில்லை எனில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சேர்த்து கோரலாம். 8 ஆண்டுகள் வரை தொகையை கூட்டி வரிச் சலுகை பெற முடியும். வரி செலுத்தும் தனிநபர் மட்டுமே இந்த பிரிவை பயன்படுத்த முடியும், பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினரோ அல்லது நிறுவனங்களோ பெற முடியாது அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வீட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கி இருக்க வேண்டும் 

உதாரணம்: 

அருண் என்பவர் கடந்த டிசம்பர் 2016இல் முதன்முறையாக ஒரு வீடு வாங்கி இருக்கிறார். 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கு அவர் ரூ. 30 லட்சம் வங்கி கடன் பெற்றிருக்கிறார். இதற்காக மாதந்தோறும் ரூ.35,000 அவர் இஎம்ஐ செலுத்தி வருகிறார். ரூ.35,000ஐ வங்கியானது வட்டி தொகை மற்றும் அசல் தொகை என பிரித்து கொள்கிறது. இதில் வட்டி மட்டும் ரூ.25,000 என வைத்து கொண்டால் ஓர் நிதியாண்டில் அவர் வட்டியாக செலுத்தும் தொகை ரூ.3 லட்சம். அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது , பிரிவு 24B இல் ரூ.2 லட்சம் வரை விலக்கு கோருகிறார். அவர் பிரிவு 80EE- ஐ பயன்படுத்தி கூடுதலாக ரூ.50,000 விலக்கு கோர முடியும்


Post a Comment

0 Comments