தினம் ஒரு கதை - வாழ்க்கை என்பது வெற்றி, தோல்வியை சார்ந்ததல்ல.

வாழ்க்கை என்பது வெற்றி மற்றும்  தோல்வியால் தீர்மானிக்க படுவதில்லை!!

 ஓர் நீதிக்கதை!!

ஒரு நாள் ஒரு சிறுவன், துறவிகள் வாழும் இடத்திற்கு சென்று, அங்குள்ள தலைமை துறவியிடம் தனக்கு ஏதாவது வேலையும், உணவும் தருமாறு கேட்டான்.

அதற்கு அந்த தலைமைத் துறவி, “உனக்கு எந்த வேலை செய்யத் தெரியும்? என்று சிறுவனிடம் கேட்டார்.

சிறுவன், “நான் பள்ளிக்கு சென்று படித்ததில்லை, எந்த வேலையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றதில்லை, எனக்கு உணவு பாத்திரங்கள் மற்றும் வீட்டை சுத்தம் செய்ய தெரியும், அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது” என்று கூறினான்.

மீண்டும் தலைமைத் துறவி, “உனக்கு கண்டிப்பாக வேறு எந்த வேலையும் தெரியாதா?”  என்று வினவினார்.

அதற்கு அந்த சிறுவன் “ஆம், ஞாபகம் வந்து விட்டது, எனக்கு சதுரங்கம் விளையாட்டு ஓரளவிற்கு நன்றாக விளையாடத் தெரியும்” என்றான்.

உடனே அந்தத் துறவி, “நல்லது! நான் உனது விளையாட்டை சோதனை செய்யப் போகிறேன்” என்றார்.

அவர், மற்றொரு துறவியை சதுரங்க போர்டு மற்றும் அதன் காய்களை ஒரு மேஜை மீது வைக்கச் சொன்னார்,

விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு, அந்தத் தலைமைத் துறவி, “நான் என் கையில் ஒரு வாள் வைத்துள்ளேன், போட்டியில் தோல்வி அடைகின்ற நபரின் மூக்கை வெட்டி விடுவேன்” என்றார்.

சிறுவன் பதறினான். எனினும் அவனுக்கு வேறு வழியில்லாததால், இதற்கு ஒப்புக் கொண்டான்.

போட்டி துவங்கியது. சிறுவனின் நிலைமை முற்றிலும் மோசமாக இருந்ததால், வெல்வதற்கு வாய்ப்பே இருக்கவில்லை.

பிறகு போட்டியில் முழு கவனம் செலுத்தி, வெற்றி பெரும் நிலைக்கு அவன் தன்னை உயர்த்திக் கொண்டான்.

அவனுக்கு எதிரில் விளையாடிக் கொண்டிருக்கும் துறவியை கவனித்தான். 

அத்துறவி பதட்டம் அடையவில்லை; ஆனால் சிறிது தடுமாற்றத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்தான்.

பிறகு அச்சிறுவன், “நான் எதற்கும் உதவாதவன், நான் இந்தப் போட்டியில் தோற்பதாலோ, என் மூக்கை இழப்பதாலோ,  இந்த உலகில் எதுவும் மாறப் போவதில்லை. 

ஆனால் இந்தத் துறவி நன்கு படித்து, தியானம் செய்து அறிவை ஊட்டுபவர். நிச்சயமாக உயர்ந்த நிலைக்கு வரப் போகும் இத்துறவி தோற்கக் கூடாது” என்று யோசித்தான்.

எனவே துறவி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், சிறுவன் வேண்டுமென்றே தவறாக காய்களை நகர்த்தினான்.

தலைமைத் துறவி வாளை வேகமாக மேசை மீது வீசினார். அனைத்து காய்களும் வெவ்வேறு திசைகளில் சிதறின.

பிறகு அவர், “போட்டி முடிந்து விட்டது. நீ போட்டியில் வெற்றி பெற்று விட்டாய், இனிமேல் நீ எங்களுடன் இங்கு தங்கலாம்” என்று கூறினார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு தலைமைத் துறவி, “உன் திறமையை சோதிப்பதற்காக நான் உன்னை விளையாட சொல்லவில்லை. 

ஆனால் சுய உணர்தலுக்கு தேவையான இரு முக்கியமான பண்புகளை உன்னிடமிருந்து எதிபார்த்துக் கொண்டிருந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

ஒன்று “மஹா பிரக்ஞை”. உயர்ந்த விழிப்புணர்வை உன்னிடம் கண்டேன். எப்பொழுது நீ தோற்கும் நிலைக்கு வந்தாயோ அப்பொழுது நீ ஒருமுகச் சிந்தனையோடு உன் முழு கவனத்தை விளையாட்டில் செலுத்தி வெற்றி பெறும் நிலைமையை அடைந்தாய். இதுவே மஹா பிரக்ஞை.

இரண்டாவதாக “மஹா கருணை”.அளவில்லா கருணை. அதையும் உன்னிடம் கண்டேன். உனக்கு எதிராக விளையாடிய ஆட்டக்காரர் தோற்கும் நிலைக்கு வந்ததும், அவரை கருணையுடன் பார்த்து, நீ வேண்டுமென்றே சில பிழைகளை செய்து அவரை வெற்றிப் பெற செய்தாய். 

இந்த இரண்டு பண்புகளும் வாழ்வில் சாதனை புரியவும், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றவும் முக்கியமானவை.

“நீ எங்களுடன் தங்கலாம்”.

நீதி:

வாழ்க்கை என்பது வெற்றி, தோல்வியை சார்ந்ததல்ல. வாழ்க்கை என்னும் சிறு பொழுதை மகிழ்ச்சி அல்லது துயரம் என்று எண்ணுவது நம் கற்பனையே.

Post a Comment

0 Comments