இரவு நேரம். மலையோரத்தில் அழகான குடிசை வீடு. அந்த வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அதன் வெளிச்சம், வீடு முழுவதும் நிறைந்திருந்தது.
விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகளும், சிறு சிறு வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. விளக்கு பிரகாசமாக சுடர் விட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த எலி, விளக்கைப் பார்த்து, "விளக்கே, நீ சுடர் விட்டு எரிவதால்தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது. இதற்கு யார் காரணம்?" என்று கேட்டது.
விளக்கின் பக்கத்தில் இருந்த தீப்பெட்டி, "நான் தான் காரணம். நான் தான் இந்த விளக்கைப் பற்ற வைத்தேன். நான் இல்லாவிட்டால் ஏது இந்த வெளிச்சம்!" என்றது.
"இல்லை இல்லை... விளக்கு எரிய நான் தான் காரணம். ஏனென்றால் நான் தான் விளக்கெரிய எண்ணெய்யை இழுத்துக் கொடுக்கிறேன்" என்றது திரி.
அதைக் கவனித்த எண்ணெய் சொன்னது, "அது எப்படி? நான் இருந்தால் தானே உங்களுக்கு வேலை. விளக்கு எரிய நான்தானே முக்கியம். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்" என்று அதட்டலாகவேக் கூறியது.
"சும்மா பிதற்றாதீர்கள்... நீங்களெல்லாம் நிற்பதற்கு நான் தான் உதவுகிறேன். நான் இல்லாவிட்டால் எண்ணெய் வழிந்து விடும். அப்புறம் எப்படி விளக்கு எரியும்? உங்கள் எல்லோரையும் தாங்கி நிற்பது நான் தான். எனவே விளக்கு எரிய நான் தான் காரணம்" என்றது குடுவை.
இப்படி எல்லோருமே, விளக்கு எரிய 'நான் தான் காரணம்! நான் தான் காரணம்!' என்று சொல்ல, எலி குழப்பமடைந்தது.
அதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த புறா, "எலியே, நீ நாளைக்குக் காலையில் வா. விளக்கு எரிய யார் காரணம்? என்று சொல்கிறேன்" என்றது.
மறுநாள் காலை, அந்த வீட்டுக்காரர் விளக்கை கழற்றித் துடைத்து வெயிலில் காய வைத்திருந்தார். தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை யாவும் தனித்தனியாகக் கிடந்தன.
எலியும் புறாவும் வந்தன.
தனித்தனியாகக் கிடந்த தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை ஆகியவற்றைப் பார்த்து புறா, "உங்களில் யாரால் தனியாக இப்பொழுது விளக்கை எரிய வைக்க முடியுமோ, அவங்க முன்னாடி வரலாம்" எனச் சொன்னது.
நான்கு பேரும் திருதிருவென விழித்தனர்.
"நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது" என்றது புறா.
உண்மை தான். குடும்ப வாழ்க்கையும் அப்படித்தான். ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருப்பது தான் குடும்பம். அதற்கு, ஒவ்வொருவரின் பங்களிப்புமே முக்கியமானது. என்னுடைய பங்களிப்பு தான் பெரியது, என்ற அகங்காரம் வந்துவிட்டால், அது எல்லோரையும் பாதிக்கும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மகன், மகள், சகோதரன், சகோதரி என ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலிருக்கும் கடமைகளை இறுமாப்பில்லாமல் செய்தாலேப் போதும். குடும்பம் தழைக்கும், நிம்மதி கிடைக்கும். ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வதே நிம்மதியான குடும்பம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.