ஆசிரியர் கைது - TNPTF மாநிலத் தலைமை கண்டனம்


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
**************************
*ஊடகச் செய்தி*
*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 14/2023  நாள்: 05.10.2023*
**************************
*சென்னையில் போராடிய ஆசிரியர்கள் கைது!*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்!*

*ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!*

*மாநில அமைப்பு கோரிக்கை!*
**************************
*சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 8 நாட்களாக "சம வேலைக்குச் சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறை கைது செய்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அடக்கு முறையின் மூலமாக ஒடுக்க நினைத்தால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி களத்தில் இறங்கிப் போராடும் என சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.*

*இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில அமைப்பின் சார்பில் இன்று (05.10.2023) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:*

*01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைச் சரி செய்து "சம வேலைக்குச் சம ஊதியம்" வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 28.09.2023 முதல் டி.பி.ஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 8 நாட்களாக அமைதியான முறையில் யாருக்கும் எவ்விதத் தொந்தரவுமின்றி அறவழியில் போராடிக் கொண்டிருந்த ஆசிரியர்களை, 8 நாட்களாக உணவு உண்ணாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஆசிரியர்களைக் குறிப்பாகப் பெண்ணாசிரியர்களை இரக்கமில்லாமல் பலவந்தமாகக் கைது செய்துள்ளது எவ்விதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.*

*கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் "சம வேலைக்குச் சம ஊதியம்" என்பது சாத்தியமில்லாத கோரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் ஏன் இந்தக்கோரிக்கை இடம்பெற்றது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றுங்கள் என்று தான் அவர்கள் போராடுகிறார்கள். எனவே, போராடும் ஆசிரியர்களை தமிழக அரசு உடனடியாக அழைத்துப்பேசி, சுமூக நிலையை ஏற்படுத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் உடல்நிலை கருதி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் தங்கள் இல்லங்களுக்குச் செல்வதற்கும், அவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கல்விப் பணியாற்றுவதற்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
 
*இதுபோன்ற அறவழிப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஒடுக்க நினைத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதையும், அதுபோன்ற நிகழ்வுகளை போர்க்குணமிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேடிக்கை பார்த்துக் கொண்டிராது என்பதையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடும் என்பதையும் தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், இது தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பு இன்று (05.10.2023) எடுத்துள்ள ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் எங்கள் இயக்கம் பங்கேற்கும் என்பதையும், இந்தக் கடுமையான களச் சூழலில் இப்போராட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இருப்பதாக தவறான கருத்தை பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பது முற்றிலும் தவறான உள்நோக்கம் கொண்ட செயல் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறது.*
***********************
*இப்படிக்கு,*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Post a Comment

0 Comments