அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா இன்று தொடக்கம்: மாணவ, மாணவியர் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு



சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா இன்றுமுதல்நடைபெறவுள்ளது. இதில் மாணவ,மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.


இதுகுறித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.


பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டுக்கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த கலைத் திருவிழாவின் நோக்கமாகும். அந்த வகையில்அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும்மாநில அளவில் இந்த ஆண்டு கலைதிருவிழா நடத்தப்படவுள்ளது.


சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் பள்ளி அளவில் இன்று (அக்.10) முதல் 14-ம் தேதி வரையும், வட்டார அளவில் 18 முதல் 21-ம் தேதி வரையும், மாவட்ட அளவில் 26 முதல் 28-ம் தேதி வரையும், மாநில அளவில் நவ.21-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.


இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments