தினம் ஒரு கதை - ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்

நம்மில் சில பேர் எப்படி என்றால் அவர்களுக்கு எதிரில் உள்ள அனைவரும் எதிரியாகவே தெரிவார்கள். 
பார்ப்பது அனைத்துமே பகையாக தெரியும்.

குறை எங்கே இருக்கிறது? வெளியே இல்லை நம்மிடம் தான் இருக்கிறது. 
ஏற்றுக் கொள்ளுகின்ற சுபாவம் இல்லை என்றால் இது மாதிரி சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

உன்னை சுற்றி இருக்கிற எல்லாமே உனக்கு வெறுப்பை தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்பதை அது காட்டுகிறது என்கிறார் ஓஷோ.

அவர் ஒரு சமயம் ஒரு கிராமத்துக்கு போயிருந்தார். அங்கே ஒரு ஓய்வு விடுதியில் தங்கி இருந்தார். 
மிகவும் சிறிய கிராமம். 

அங்கே நாய்கள் மிகவும் அதிகம். இரவு ஆனால் எல்லா நாய்களும் அங்கே வந்து மரத்தடியில் கூடிவிடும். 
வாள் வாள் என்று குரைக்க ஆரம்பித்து விடும். 

அந்த ஓய்வுவிடுதியிலே மந்திரி ஒருவரும் தங்கி இருந்தார். 

அவருக்கு அந்த நாய்கள் குரைப்பது பெரிய தொந்தரவாக இருந்தது. 
தூங்க முடியவில்லை. பாதி இரவில் எழுந்து இவரிடம் வந்தார். அந்த சமயம் இவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இவரை எழுப்பி சுற்றிலும் இவ்வளவு சப்தங்களுக்கிடையிலே உங்களால் எப்படி இவ்வளவு நிம்மதியாக தூங்க முடிகிறது? என்று கேட்டார்.

அதற்கு இவர் சொன்னார், 
அந்த நாய்கள் உங்களுக்காக குரைக்கவில்லை. 
உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காக அவைகள் இங்கே வரவில்லை. 
அவைகள் எல்லாம் பத்திரிகைகள் படிப்பதில்லை. 
அதனால் ஒரு மந்திரி இங்கே வந்து தங்கி இருக்கிறார் என்பதும் அவைகளுக்கு தெரியாது. அவைகளுக்கும் உங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அது எல்லாம் அது அது வேலையை செய்து கொண்டிருக்கிறது. 
நீங்கள் ஏன் துன்பப்படுகிறீர்கள்? என்றார்.

அவை எல்லாம் குரைத்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் நான் எப்படி துன்பப்படாமல் இருக்க முடியும் என்றார்.

 நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்து போராடுகிறீர்கள். அதோடு போராடுவதை நிறுத்துங்கள். 
 அதுதான் பிரச்சினையை உண்டாக்குகிறது. பிரச்சினையை உருவாக்குவது அவைகளின் சத்தம் அல்ல. 
 உங்களுடைய போராட்டம்தான். 

அந்த சத்தம் உங்களை தொந்தரவு செய்யவில்லை. 
அந்த சத்தத்தினால் நீங்கள் உங்களை தொந்தரவு செய்கிறீர்கள். 
நீங்கள் சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். 

நீங்களாகவே உங்களுக்குள்ளே ஒரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 
இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் நான் தூங்க முடியும் என்ற நிபந்தனையை நீங்கள் உங்களுக்கு விதித்துக் கொண்டீர்கள். 

உங்கள் நிபந்தனையை நாய்கள் கவனிக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்கள் நிபந்தனை நிறைவேறினால்தான் தூங்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.

உங்கள் நிபந்தனைதான் உங்களை தொந்தரவு செய்கிறது. 

நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? நாய்கள் குரைப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். 
அவைகள் சத்தத்தை நிறுத்தினால்தான் நான் தூங்குவேன் என்ற நிபந்தனையை விலக்குங்கள்.

 நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நமக்குத் தகுந்தாற்போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது முடியாத காரியம்.

 ஆக எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். 🙏🙏🙏

Post a Comment

0 Comments