மாணவிகளை அடித்துக் காயப்படுத்திய புகாரில், அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆசிரியர் தீபலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நடவடிக்கை எடுத்துள்ளார். வீட்டுப்பாடம் செய்யாத 3 மாணவிகளை ஆசிரியர் தீபலட்சுமி தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரில் போலீஸ் வழக்குப்பதிந்த நிலையில் தீபலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வேலூர் அடுத்திருக்கும் இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றுபவர் தீபலட்சுமி. இவர், வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், கம்மவார்பாளையத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகளுக்கு இடது தோள்பட்டை மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில், உள்காயம் ஏற்பட்டு, அந்தப் பகுதி வீக்கமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.



மாலையில், வீட்டுக்குச் சென்ற மாணவிகளின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர், நடந்த விவரங்களைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.



மேலும், இது குறித்து துறை ரீதியாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, இலவம்பாடி பள்ளிக்கு நேரில் சென்று, காயமடைந்ததாகக் கூறப்பட்ட நான்கு மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.



ஆசிரியை தீபலட்சுமியிடமும் விளக்கம் பெற்றார். இதையடுத்து, விசாரணை அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார். பலகோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியை தீபலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி.

Post a Comment

0 Comments