தினம் ஒரு கதை - ஒரு ஊரில் ஒரு பாட்டி 2.0

ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பொரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அதே பாட்டிதாங்க. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.
அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை எடுத்துட்டுபோன காக்கா இல்லைங்க. அதோட பேரன்.
“வந்துட்டியா… உங்க தாத்தா மாதிரி திருடித்திங்க. ஏண்டா, எப்படா உழைத்து சாப்பிடப்போறீங்க?” என்று பாட்டி கோபப்பட்டாள்.
அதை கேட்ட பேரன் காக்காவுக்கு அவமானமா போச்சு. தலைகுனிஞ்சு நின்னுச்சு. மீண்டும் பாட்டி பேசினாள்.
“அதான் இப்போ புதுசு புதுசா என்னனென்னமோ விக்குறாங்களே. ‘பிச்சா… பக்கர்‘னு அங்க போக வேண்டியதுதானே”.
“என்னது பிச்சா… பக்கரா..? ஓ… பீட்ஸா, பர்கரா? அதெல்லாம் நம்ம உடம்புக்கு ஒத்துக்காது பாட்டி. அது ஜங்க் ஃபுட்” என்று விளக்கமளித்தது காக்கா.
“சரி உன்னை பார்த்தா பாவமா இருக்கு. இந்தா, ஒரு வடையை பிச்சையா போடறேன்”, என்று ஒரு வடையை வீசியெறிந்தாள் பாட்டி. காக்கை வடையுடன் ஒரு மரத்தில் வந்து அமர்ந்தது. அப்போது ஒரு நரி அங்கு வந்தது.
“காக்கா… காக்கா நீ ரொம்ப அழகா இருக்கே! உன் அழகான குரலில் ஒரு பாட்டு பாடு” என்று வழக்கமாக தந்திரம் பண்ணுச்சு. இது பழைய நரியோட பேரன் நரி.
“வந்துட்டார்யா ஏ.ஆர்.ரஹ்மான்! எனக்கு சான்ஸ் கொடுக்க… ஏண்டா நரி, நீ டயலாக்கை கொஞ்சம் கூட மாத்தவேமாட்டியா?”
“என்ன காக்கா ரொம்ப வெறுப்பா பேசுறே?!”
பாட்டி தன்னை திட்டியதை நரியிடம் சொன்ன காக்கா, “இனிமே நான் உழைச்சுதான் சாப்பிடப்போறேன். அதனால இந்த வடையை உனக்கே பிச்சையா போடுறேன்”, என்று விருட்டென பறந்தது.
’காக்கா போடுற பிச்சையை திங்கற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேனா?’ என்று ஆதங்கப்பட்டது நரி.
‘எனக்கும் மானம், ரோஷம் இருக்கு. நானும் உழைச்சுதான் சாப்பிடுவேன்‘ என உறுதி எடுத்தது.
அப்போது, “ஐயா தர்மம் போடுங்கய்யா…” என்று ஒரு குரல்.
‘நாம திருந்தினாலும் இவங்க திருந்தமாட்டாங்க போலிருக்கே…‘ என்று அந்த வடையை மனிதனுக்கு பிச்சை போட்டுவிட்டு ஸ்டைலாக சென்றது நரி.
மாற்றம் மனிதர்களிடம் முதலில் வந்தால் நன்றாக இருந்திடுமோ?!

Post a Comment

0 Comments