ஒரு மலைப்பகுதி அங்கே ஒரு ஞானி இருந்தார்.ஒரு புகழ்பெற்ற ஞானி. ஒரு இளைஞன் அவரை தேடிக் கொண்டு வந்தான். என்ன விஷயம் என்று கேட்டார்.
ஐயா நான் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படித் தேடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் கிடைத்தீர்கள். நான் ரொம்ப தூரத்தில் இருந்து வருகிறேன் என்று சொல்லி விவரமாகச் சொன்னான்.
உடனே அந்த ஞானி இந்த உண்மை சமாச்சாரத்தை எல்லாம் இப்போதைக்கு விட்டுவிடு. உன்னிடமிருந்து நான் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. உனது ஊரில் அரிசி விலை எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
இதை கேட்டதும் திகைத்துப் போனான். ஒரு மகா ஞானியிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.
எனது ஊரில் உள்ள அரிசி விலைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு புரியவில்லை.
அங்கே அரிசி விலை இங்கே ஒரு சாதாரண விஷயம். அதுவும் இந்த ஞானிக்கு தொடர்பில்லாத ஒரு விஷயம். வந்த இளைஞன் மிக உயர்ந்த உண்மையை தேடிக்கொண்டு வந்தவன். அப்படி வந்தவனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
மெதுவாகச் சொன்னான் சுவாமி என்னை மன்னிக்கவேண்டும். மரியாதை குறைவாக பேசுவதாக நினைக்காதீர்கள். இது மாதிரியான கேள்விகளை இனிமேல் என்னிடம் கேட்காதீர்கள். ஏனென்றால் நான் என் கடந்தகால பாதைகளை மறந்துவிட்டேன். எந்த இறந்த காலமும் என்னிடம் இல்லை. கை கழுவி விட்டேன். நான் கடந்து வந்த பாதைகளை எரித்து விட்டேன். ஏறி வந்த ஏணிகளை உதறி தள்ளி விட்டேன். இறந்த காலத்தைப் பொறுத்த வரையில் நான் இப்போது இறந்து போனவன். இதோ இப்போது கடந்து போன கணத்தில் கூட நான் இறந்து போனவன்தான் என்றான்.
அதைக் கேட்டதும் அந்த ஞானி அவன் அருகில் வந்து அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் . உட்கார் இனிமேல் நாம் உண்மையை பற்றி பேசுவோம். நீ கடந்தகாலச் சுமைகளை தூக்கி கொண்டு இருக்கிறாயா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளத்தான் அரிசி விலை என்ன என்று கேட்டேன். நீ அதைச் சொல்லி இருந்தால் உடனே உன்னை விரட்டி இருப்பேன். உண்மை பற்றி பேச மறுத்து இருப்பேன்.
நிகழ்காலத்தில் வாழ தெரியாத மனிதரை ஒரு தோட்டத்திற்கு அழைத்து கொண்டு போங்கள். ஒரு ரோஜா மலரை அவரிடம் காட்டுங்கள். இந்த ரோஜா எவ்வளவு அழகானது என்று அவரிடம் சொல்லுங்கள். உடனே அவர் என்ன சொல்வார் தெரியுமா? இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாலைக்குள் எல்லாம் உதிர்ந்து போய் விடும் என்பார்.
இளமை எவ்வளவு சுகம் என்று சொல்லுங்கள் .
சீக்கிரம் முதுமை வந்து விடும் என்பார்.
மகிழ்ச்சியை பற்றி பேசினால் அது ஒரு மாயை விலகிப் போய்க் கொண்டே இருக்கும் என்பார்.
ஆனால் நிகழ்காலத்தில் வாழ தெரிந்த ஒரு மனிதரை ஒரு பூங்காவுக்கு அழைத்துக்கொண்டு போங்கள். வண்ண மலர்களுடன் அவர் ஆடிப் பாடி மகிழ்வார்.
நான் ஏன் வராத மாலைப்பொழுதை பற்றி கவலைப்பட வேண்டும் என்பார். இந்த மலர்கள் உதிர்ந்து போவதாக இருந்தால் கூட அதைப்பற்றி என்ன இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பார்.
இதை விட ஆச்சரியம் என்னவென்றால் மாலையில் அந்த மலர்கள் உதிரும் போது இவர் அதே உற்சாகத்துடன் இருப்பார். மலரும் பூக்கள் தான் கவர்ச்சியா? உதிரும் பூக்கள் அழகுதான் என்பார்.
இறந்தகாலத்தைப் பற்றி கொண்டிருப்பதனால் உண்மையை உணர முடியாது. ஏனென்றால் உண்மை என்பது இதோ இந்த நொடியில் இந்த கணத்தில் இருக்கிறது. உண்மை என்பது இறந்தகாலத்தோடும் எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்டது அல்ல.
உண்மை காலம் கடந்தது. காலமற்ற காலத்தில் வாழ்கிறவனாலே நிகழ்காலத்தை உணரமுடியாது.
உண்மையும் காலமும் ஒன்று சேர்ந்து நடக்காது அப்படி என்று விளக்கம் கொடுக்கிறார் அந்த ஞானி.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.