தினம் ஒரு கதை - நோ ஸ்ட்ரோக்குகள்

சில விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். பிறந்து சில மணி  நேரங்களேயான மூன்று நாய்க்குட்டிகளை தனித்தனியே தொட்டிலில் படுக்க வைத்து ஒரு ஆராய்ச்சி. அந்தத் தொட்டில்கள் வித்தியாசமானவை. பல்வேறு வசதிகள் கொண்டவை. தொட்டில் மூடித்தான் இருக்கும். ஆனால் தொட்டிலுக்குள் உயிர் வாழ தேவையான வாயு, தண்ணீர், உணவு என அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த நாய்க்குட்டிகளால் வெளி உலகத்தையோ வேறு எவரையோ பார்க்க இயலாது. தொட்டிலை மூடி அவற்றை ஒவ்வொரு விதமாக பராமரித்தனர்.

முதல் தொட்டிலில் உள்ள நாய்க்குட்டிக்கு அன்பையும் அரவணைப்பையும் காட்டி முதல் தொட்டியில் உள்ள நாய்க்குட்டியை அடிக்கடி திறந்து உடம்பை தலையை தடவி கொடுத்து அதனுடன் அன்பாக கொஞ்சிப் பேசினர். இப்படி அடிக்கடி செய்து வந்தனர். பிறகு தொட்டிலை மூடிவிட்டனர். இதுபோல் இடைவெளி விட்டு தொடர்ந்து செய்தனர்.

 அதேபோல இரண்டாவது தொட்டிலையும் திறந்து அந்தத் தொட்டியில் கிடக்கும் நாய்க்குட்டி இடம் வெறுப்பையும் கோபத்தையும் காட்டினர். தொட்டில் கதவைத் திறந்த உடன் அந்த நாய்க்குட்டியை கிள்ளினர். சில சமயம் அடித்தனர். ஒரு சமயம் சுடுதண்ணீரை அதன் மீது ஊற்றினர். வேறு சில சமயங்களில் அதன் கண்களில் கொஞ்என்றேமிளகாய் பொடியை தூவினர். இப்படி எல்லாம் செய்துவிட்டு தொட்டிலை மூடிவிட்டனர். இந்த வேலையையும் தொடர்ந்து சில நாட்களுக்குச் செய்தனர். 

மூன்றாவது தொட்டில் உள்ள நாய்க்குட்டியை எதுவும் செய்யவில்லை. அந்தத் தொட்டில் பக்கமே போகவில்லை. உணவு, தண்ணீர் , காற்று எல்லாம் தாராளமாக மூன்றாவது குட்டிக்கும் கிடைத்தது. ஆனால் மூன்றாவது குட்டிக்கு எவருடனும் தொடர்பு இல்லை. அந்த நாய்க்குட்டிக்கு மற்றொரு உயிரின் தொடர்பே இல்லை. அதனிடம் அன்பு வெறுப்பு இரண்டையுமே எவரும் காட்டவில்லை.

 இப்படியாக சில நாட்கள் கழிந்தபின் அன்பு காட்டிய நாய்க்குட்டி இருக்கும் முதல் தொட்டிலைத் திறந்து நாய்க்குட்டியை வெளியே எடுத்து கீழே விட்டனர். அது மகிழ்வாக அவர்களோடு ஒட்டிக் கொள்கிறது. ஆரோக்கியமாக இருக்கிறது.

 பின்பு வெறுப்பை காட்டிய  இரண்டாவது தொட்டிலை திறக்கின்றனர். அதிலிருந்த நாய்க்குட்டியானது தொட்டில் ஓரத்தில் பதுங்கியபடி நின்று பார்க்கிறது. கோபமாக குரைக்கிறது. திறந்தவரின் கையை கடிக்கத் தாவுகிறது.

மூன்றாவது தொட்டிலை பல நாட்களில் பின் இப்போதுதான் முதல் முறையாக திறக்கின்றனர். உள்ளே இருந்த குட்டி இறந்து கிடக்கிறது.

முதல் நாய்க்குட்டிக்கு அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் அன்பு முதலானவை பாசிட்டிவ் ஸ்ட்ரோக் (positive storke) என்றும், இரண்டாவது நாய்க்குட்டிக்கு செய்த எரிச்சல் காட்டுதல் போன்றவை (Negative stroke) என்றும், மூன்றாவது நாய்க்குட்டியை கண்டு கொள்ளாது விட்டதை நோ ஸ்ட்ரோக் (No stroke) என்றும் பெயரிடுகிறார்கள்.

கிரிக்கெட்டில் சொல்கிறோமே அதுபோல ஸ்ட்ரோக் (Stroke) ஒரு வெளிப்பாடு. அது பாராட்டுவதாக இருக்கலாம். எதிர்ப்பதாக இருக்கலாம் விமர்சிப்பதாகவும் இருக்கலாம்.

பாசிட்டிவ் ஸ்ட்ரோக்ஸ் நாய்க்குட்டிக்கு மகிழ்வையும் ஆரோக்கியத்தையும் கொடுத்தது.

நெகட்டிவ் ஸ்ட்ரோக்ஸ் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தது.

நோ ஸ்ட்ரோக்ஸ் கடும் பாதிப்பை கொடுத்து கொன்றேவிட்டது. 

இதுபோல அன்றாட மனிதர்களுக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் ஸ்ட்ரோக்குகள் தேவைப்படுகின்றன. அது கிடைக்காத மனிதர்கள் ஆரோக்கியமான மனநிலை, உடல் நிலையில் இருப்பதில்லை.

பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் மொத்தத்தில் ஏதோ ஒரு ஸ்ட்ரோக் தேவை. ஆகவே அதை சைக்காலஜிக்கல் ஆக்சிஜன் என்று அழைக்கிறார்கள். மனதுக்குத் தேவையான வாயு என்று பொருள்.

 நம்மோடு உறவாடும் உலகத்தவர்க்கும் மனிதர்களுக்கும் நாம் பாராட்டுதல்கள் , அன்பு மரியாதை , ஆலோசனை ,உதவி என்று எத்தனையோ விதமான நல்ல விடயங்கள் கொடுக்க வேண்டும்.

 சரியில்லாத மனிதர்களுக்கும் தவறு செய்யும் மனிதர்களுக்கும் அவ்வப்பொழுது கொஞ்சம் நெகட்டிவ் ஸ்ட்ரோக் கொடுக்க வேண்டும். சமயத்தில் சமயோசிதமாக நோ ஸ்ட்ரோக்கை கொஞ்சம் மருந்து போல பயன்படுத்தலாம்.

உதாசீனம் , அலட்சியம் , கண்டு கொள்ளாமல் இருத்தல் ஆகியன திட்டுவதை , அடிப்பதை காட்டிலும் வலி தரத்தக்க நோ ஸ்ட்ரோக்குகள்.

இந்த காலத்துக்கு பொருத்தமானது நோ ஸ்ட்ரோக்ஸ் என்பதே சரி.

Post a Comment

0 Comments