Income Tax - பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?


2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி நடைமுறையை பொதுவான நடைமுறையாக மாற்றும் திட்டம் மெல்ல கொண்டுவரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால், பழைய அல்லது புதிய வரி நடைமுறையில் இருப்பவர்கள், எந்த வரி முறைக்கு மாறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், பொது பட்ஜெட் அறிவிப்புக்குப் பின், புதிய வரி முறை பலரால் விரும்பப்படும் வரி முறையாகியிருக்கிறது.  புதிய வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் புதிய வரிமுறைக்கு மாறியிருக்கிறார்கள். 

எது சிறந்த வரிநடைமுறை என்பது குறித்து நிபுணர்கள் சொல்வது என்னவென்றால்..

என்ன வேறுபாடு?

புதிய வரி நடைமுறையில் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முதலில், புதிய வரி நடைமுறையில் 6 வரி வரம்பு நிலைகள் இருந்தன. இது தற்போது ஐந்து நிலைகளாக மாற்றப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், 87ஏ பிரிவின் கீழ் வரி செலுத்துவோருக்கான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ் ரேட்) 37 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வருமானம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 2023- 24ஆம் நிதியாண்டில் நிரந்தர பிடித்தம் (ஸ்டேன்டர்ட் டிடக்ஷன்)  ரூ.50,000 என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு வரி நடைமுறைகளிலுமே மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாகவே நீடிக்கிறது. அதுபோல செஸ் வரியும் ஒன்றுபோலவே நீடிக்கிறது. அதாவது, இரு வரி நடைமுறைகளிலும், வருமான வரித் தொகையில் 4 சதவிகிதம் செஸ் விதிக்கப்படுகிறது.

ஆச்சரியம் என்னவென்றால், மத்திய அரசு பழைய வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது ஏற்கனவே இருந்ததுபோல மூன்று வருமான வரி உச்சவரம்பு நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வரி நிலைகள் ஒரு தனிநபரின் வயது, குடியிருப்பு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. அதாவது, 60 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பழைய வரிவிதிப்பு முறையில் அடிப்படை வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. அதேவேளையில், 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 80 வயதுக்கு உள்பட்ட மூத்த குடிமக்களுக்கு அடிப்படை வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட சிறப்பு மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது. 

பழைய - புதிய வரி விதிப்பு

ஒருவர், தற்போதுதான் பணியில் சேர்ந்து, ரூ.7 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அவர்கள் புதிய வரி விதிப்பு முறைக்கு செல்வது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள். எந்த வரி நடைமுறை பயனுள்ளதாக இருக்கும்? இது எப்படிப்பட்ட கேள்வி என்றால், திருமணம் செய்து கொள்ள எந்த வயது உகந்தது என்பது போலத்தான். இந்த கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் இல்லை. இது தனிநபரின் வருமானம், முதலீட்டு திட்டங்கள், வரி செலுத்துபவரின் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் கணக்கு தணிக்கையாளர் சேட்டன் தாகா. 

அதுபோலவே, ஒரு தனிநபர் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டினாலும் அவர் புதிய நடைமுறைக்குச் செல்லலாம். ஒருவேளை வருமானம் அதிகரித்தால், அவர் மேற்கொள்ளும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் அவருக்கான செலவுக் கட்டணங்களை இங்கே கொண்டுவரலாம் என்கிறார் சேட்டன் தாகா.

இரண்டு வரி விதிப்பு நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புதிய வரி விதிப்பு நடைமுறை எளிமையாக உள்ளது. எளிமையான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தவே மத்திய அரசு விரும்புகிறது.

தனி நபரின் ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சத்துக்குள் இருந்தால், எந்த முதலீட்டிலும் அல்லது வரி விலக்குக்காக அரசு அறிமுகப்படுத்தும் எந்த சேமிப்புத் திட்டத்திலும் சேர வேண்டாம். கையில் தேவைக்கு மேல் பணமிருந்தால் அதனை அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப முதலீடு அல்லது விருப்பப்படி செலவிடலாம்.

மற்றொரு கணக்குத் தணிக்கையாளரும் ஐசிஏஐ முன்னாள் தலைவருமான வேத் ஜெயின் கூறுகையில், இதே கூற்றைத்தான் வலியுறுத்துகிறார். அதேவேளையில், ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் இரண்டு வரி முறைகளில், வரிச் சேமிப்பு எதில் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டும்.
tax_table.jpg?w=360&dpr=3

அதாவது, ரூ.7 லட்சத்துக்குள் அல்லது ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கு புதிய வரி நடைமுறை மிகச் சிறந்ததாக இருக்கும்.

தனி நபரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சமாக இருந்தால், பழையதைவிடவும் ரூ.1,12,500 வரி குறைவாக இருக்கும். ஒரு வேளை இந்த ஆண்டு வருமானத்தில் பழைய வரி விதிப்பில் இருந்தால் ஒருவர் ரூ.3,75,000க்கு முதலீடு செய்ய வேண்டியது இருக்கும். இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறையில் இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயன்பெற முடியாது.

வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருந்தால், அவர்களுக்கு வரி விலக்குச் சலுகைகளைப் பெற பழைய வரி விதிப்பு நடைமுறையே உகந்ததாக இருக்கும். ஒருவேளை, தனிநபர், எந்த முதலீடு அல்லது எந்த சேமிப்பிலும் இல்லையென்றால் புதிய வரி விதிப்பில் இணையலாம். 

Post a Comment

0 Comments