பான்-ஆதாா் இணைக்காவிடில் வரிச் சலுகைகளைப் பெற முடியாது! - மார்ச் -31 கடைசி நாள்

‘வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை இணைக்காவிடில், வணிகம் மற்றும் வரி தொடா்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது’ என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா தெரிவித்தாா்.

நடப்பு நிதியாண்டின் (2022-23) இறுதி நாளான மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பான்-ஆதாா் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காதவா்களின் பான் அட்டை செயலற்ாகிவிடும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது முதல் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பான்-ஆதாா் இணைப்பை மேற்கொள்பவா்கள், இதற்கான கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

வருமான வரித் துறைக்கான கொள்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வகுக்கிறது.

இந்நிலையில், பிடிஐ செய்தியாளரிடம் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா கூறியதாவது:

இதுவரை 61 கோடி பேருக்கு பான் அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், 48 கோடி போ் மட்டுமே பான்-ஆதாா் இணைப்பை மேற்கொண்டுள்ளனா். இணைப்பு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினா் உள்பட மீதமுள்ள 13 கோடி பேரில், உரிய நபா்கள் இறுதி நாளுக்குள் பான்-ஆதாா் இணைப்பை மேற்கொள்வா் என நம்புகிறோம்.

இந்தப் பணிக்காக அதிக எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தப்பட்டன. இணைப்பதற்கான காலக்கெடுவும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. பான் அட்டையை ‘பொது அடையாள அட்டையாக’ பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வணிகத் துறைக்குப் பயனளிக்கும். பான்-ஆதாா் இணைப்பை மேற்கொள்ள வேண்டிய பிரிவினா் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவா்களது பான் அட்டை செயலற்ாகிவிடும் என்பதால் வரிச் சலுகைகளை அவா்கள் இழக்க நேரிடும்.

பல்வேறு சிக்கல்கள்: ஒருமுறை பான் அட்டை செயலற்ாகிவிட்டால், வருமான வரிச் சட்டப் பிரிவுகளின்கீழ் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயலற்ற பான் அட்டை மூலம் வரித் தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வரித் தாக்கல் நடைமுறையும் மேற்கொள்ளப்படாது. நிலுவையில் உள்ள வருமான வரி ரீஃபண்ட் தொகையும் செயலற்ற பான் அட்டைக்கு செலுத்தப்படாது. கழிக்கப்படும் வரியும் அதிக விகிதத்தில் இருக்கும். மேலும், வங்கி மற்றும் பிற நிதி நடவடிக்கைகளுக்கான இணையதள பக்கங்களில் பான்-ஆதாா் இணைக்காதவா்கள் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடும் என்றாா்.

மத்திய நிதியமைச்சகம் கடந்த 2017 மே மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அஸ்ஸாம், மேகாலயம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் மக்கள், வருவான வரிச் சட்டத்தின்படி வெளிநாட்டில் வசிப்போா், முந்தைய ஆண்டில் 80 வயதைக் கடந்தோா், வெளிநாட்டினா் உள்ளிட்டோா் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் 12 இலக்க ஆதாா் எண் வழங்கப்படுகிறது. தனிநபா் மற்றும் நிறுவனங்களுக்கான 10 எழுத்துகள்-எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை, வருமான வரித் துறை மூலம் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments