தினம் ஒரு கதை - கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.


ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார். 


ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும். 


என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.


என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.


நீதி :


மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். 


Post a Comment

0 Comments