தினம் ஒரு கதை - தகவல் அறிவு ஞானம் ஆகாது



ஒரு நாட்டில் ஒரு அரசர் இருந்தார். அந்த அரசருக்கு ஒரே ஒரு பிள்ளை. அந்த பிள்ளைக்கு விவரமே தெரியாது. அவன் ஒரு முட்டாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அரசனுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வர வேண்டியவன் அவன் தான். ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒருவன் இப்படி இருந்தால் என்ன செய்வது இதுதான் எல்லோருக்கும் உள்ள கவலை.

 மன்னர் அமைச்சர்களை கூட்டினார். ஆலோசனை கேட்டார். இவனை இன்னொரு நாட்டு பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி படிக்க வைக்கலாம். அங்கே போய் படித்து விட்டு வரட்டும். நிறைய படித்து நல்ல ஞானத்தோடு திரும்பி வந்த பிறகு அரசன் ஆக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை சொன்னார்கள். 

மன்னருக்கும் அது சரி என்று பட்டது மகனை வெளிநாட்டுக்கு படிப்பதற்காக அனுப்பி வைத்தார். இவனும் போய் ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் நிறைய படித்தான். அதன் பிறகு தந்தைக்கு கடிதம் அனுப்பினான். தந்தையே நான் நிறைய படித்து விட்டேன். இனிமேல் நாடு திரும்பலாம் என்று நினைக்கிறேன் என்று எழுதினான். மன்னருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மகன் படித்துவிட்டான் என்கிற ஆனந்தம். உடனே மகன் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்தார். இளவரசன் நாடு திரும்பினான்.

அதை கொண்டாடுவதற்காக அரண்மனையில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தார் அரசர். முக்கியமானவர்கள் எல்லோரும் அதில் கலந்து கொண்டார்கள். இந்த விருந்துக்கு ஒரு முனிவரும் வந்திருந்தார்.

 அவர் இளவரசனிடம் போய் என்னப்பா என்ன படிச்சிருக்கே?  எனக்கேட்டார்.

 இளவரசன் நிறைய படித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னான்.

 என்னென்ன படிச்ச எல்லாத்தையும் விவரமாகச் சொல் என்றார் முனிவர்.

 அவன் எல்லாத்தையும் விபரமாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே முனிவர் தன் மோதிரத்தைக் கழற்றி உள்ளங்கையில் வைத்து மூடினார். அப்படியே கையை நீட்டி அவன் முன்னால் காட்டி இதற்குள் என்ன இருக்கிறது என்று சொல் என்றார்.

 இளவரசன் ஒரு கணம் யோசித்தான். அதற்கப்புறம் உங்கள் கைக்குள் இருப்பது ஒரு வட்டமான பொருள். நடுவிலே துளை இருக்கும் என்று சொன்னான்.

முனிவர் திகைத்துப் போய்விட்டார். பையன் பெரிய அறிவாளியாக இருப்பான் போல என்று நினைத்துக்கொண்டார்.

 சரி என் கையிலே இருக்கிறது வட்டமான பொருள் நடுவில் துளை இருக்கும் என்பதை சொல்லி விட்டாய். அதன் பெயரென்ன என்று கேட்டார்.

 இளவரசன் சிறிது நேரம் யோசித்தான்.  அதற்கப்புறம் சொன்னான். முனிவரே நான் படித்த விஞ்ஞானம் உங்களுக்கு பதில் சொல்ல உதவி செய்யவில்லை. இருந்தாலும் பதில் சொல்கிறேன் .அது ஒரு வண்டி சக்கரம் என்று சொன்னான். 

 இப்பொழுதுதான் முனிவருக்கு புரிந்தது அதாவது முட்டாளை படிக்க வைக்க முடியும். ஆனால் சிந்திக்க வைக்க முடியாது.

 இதைத்தான் ஓஷோ ' தகவல் அறிவு ஞானம் ஆகாது'  என்று சொல்கிறார்.

 ஏனென்றால் தகவல்கள் மாறுதலை ஏற்படுத்தாது. ஆனால் ஞானம் என்பது மாறுதலை உண்டாக்கக்கூடிய ஒன்று. மனம் ஒரு சரியான நிலையான வழிக்கு வந்த பிறகு  கற்கின்ற கல்விதான் உண்மையான கல்வி. மனம் முழு மாறுதலுக்கு உட்பட்டு சரியான ஒரு நிலைக்கு வருவதற்கான வழி தியானம் என ஓசோ சொல்கிறார்.

இதனால் நிறைய படித்திருக்கிறேன் என்று சொல்கிறவன் ஞானம் உள்ளவன் ஆகமாட்டான். எவனொருவன் மனம் ஒரு நிலைக்கு வந்தபிறகு கற்கின்றானோ அவனே ஞானி ஆகிறான்.
🙏🙏🙏
#Story
#Tamil story
#Daily Story

Post a Comment

0 Comments