அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டுக்கான படிப்பு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்காலம் முடித்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.7.2 லட்சம்: இதுதவிர விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிப்புகளை பயில்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் ரூ.7.2 லட்சத்துக்குள் இருப்பதுடன், தங்கள் பணி மற்றும் ஊதிய விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் இறந்துபோன ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகத்துக்கு டிச.31-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உடனே தெரிவித்து படிப்பு உதவித்தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் விரைவாக விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இந்தாண்டு முதல் தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ.10,000,பட்டயப் படிப்புக்கு ரூ.5,000 உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.