இன்ஜி., முதலாமாண்டு வகுப்பு இம்மாத இறுதியில் துவங்கும் - அமைச்சர் பொன்முடி!


இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழக உயர்கல்வி துறை சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம் நான்கு சுற்றுகளில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன.
சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில், முதலாம் சுற்றில் 10 ஆயிரத்து 351 பேர், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். இரண்டாம் சுற்றில் 31 ஆயிரத்து 94 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது; 23 ஆயிரத்து 458 பேர் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களில், 14 ஆயிரத்து 153 பேர் தங்கள் ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர்.

இரண்டாம் சுற்றில் ஒதுக்கீடு பெற்றவர்கள், வரும் 10ம் தேதிக்குள், கல்லுாரிகள் மற்றும் கவுன்சிலிங் உதவி மையங்களில் கட்டணம் செலுத்தி, தங்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மூன்றாம் சுற்று கவுன்சிலிங், அக்.,15ல் துவங்கும்.

இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு, இந்த மாத இறுதியில் வகுப்புகள் துவங்கும். பிளஸ் 2வில் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில், நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.

பி.ஆர்க்., சேர்க்கை

பி.ஆர்க்., படிப்பில், 44 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 5ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 8ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments