இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் 2022ம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை (NIRF), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மேலாண்மை கல்லூரிகள், தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில், அதிக புள்ளிகளை பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த பட்டியலில், தமிழகத்திலுள்ள சிறந்த 10 மேலாண்மை கல்லூரிகள் குறித்த விபரங்களை பார்ப்போம்:
1. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras, DOMS)
இந்திய அரசால், தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். கடந்த 1959ம் ஆண்டு, அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பண உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது.இந்திய நாடாளுமன்ற ஆணையால் நிறுவப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவது ஆகும். கடந்த 2016ம் ஆண்டு, மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF)தொடங்கப்பட்டதில் இருந்து, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில், நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என, தரவரிசைப்படுத்தப்பட்டது.
NIRF 2022 புள்ளிகள் - 66.6 | அகில இந்திய தரவரிசை - 10
2. இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சிராப்பள்ளி (IIM, Trichy)
திருச்சிராப்பள்ளி பொது-தனியார் பங்களிப்புடன் (PPP), மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட 20 ஐஐஎம்களில், திருச்சி ஐஐஎம்மும் ஒன்றாகும். கடந்த 2013ல் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தொழிலக பங்குதாரர்கள் இணைந்து செய்யப்படும் நிதிபங்களிப்பால் இயங்கிவருகிறது. இது, 2017 முதல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. NIRF 2022 புள்ளிகள் - 61.88 | அகில இந்திய தரவரிசை - 18
3. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை
அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் ( Amrita Vishwa Vidyapeetham) கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கோயம்புத்தூர் எட்டிமடையில் உள்ளது. கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த கல்வி நிறுவனம், கேரளத்தில் அமிர்தபுரி, கொச்சி, கர்நாடகத்தில் பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நான்கு வளாகங்களிலும் செயல்படுகின்றன. இந்த நிறுவனம், 2003ல் உருவாக்கப்பட்டது.
NIRF 2022 புள்ளிகள் - 57.83 | அகில இந்திய தரவரிசை - 27
4. கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (கிரேட் லேக்ஸ் அல்லது GLIM என்று அழைக்கப்படுகிறது) என்பது, நாட்டில் உள்ள ஒரு தனியார் பிஸினஸ் ஸ்கூல் ஆகும். இது, 2004ல் சென்னையில் அதன் முதல் வளாகத்துடன், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் பேராசிரியரான பாலா வி.பாலச்சந்திரனால் நிறுவப்பட்டது. கிரேட் லேக்ஸின் இரண்டாவது வளாகம், டெல்லி குர்ஹானில் செயல்பட்டு வருகிறது.
NIRF 2022 புள்ளிகள் - 54.9 | அகில இந்திய தரவரிசை - 31
5. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (NIT Trichy)
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி (National Institute of Technology, Tiruchirappalli, NITT) தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.இதற்கு முன்னர் மண்டலப் பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (Regional Engineering College, REC) என அழைக்கப்பட்டது. தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களை உருவாக்க,1964ல் இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.
NIRF 2022 புள்ளிகள் - 53.54 | அகில இந்திய தரவரிசை - 39
6. அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
அரை நூற்றாண்டை நெருங்கும் அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும். முக்கிய வளாகம் சென்னையில் உள்ளது. இது, முதலில் 4 செப்டம்பர் 1978ல் நிறுவப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை பெயரால் பெயரிடப்பட்டது.அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) நான்கு கல்லூரிகளைக் கொண்டுள்ளது - பொறியியல் கல்லூரி (CEG, கிண்டி வளாகம்), அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT, கிண்டி வளாகம்), மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT, குரோம்பேட்டை வளாகம்) மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி. (SAP, கிண்டி வளாகம்).
NIRF 2022 புள்ளிகள் -50.72 | அகில இந்திய தரவரிசை - 49
7. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி கோவை
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி (பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி), தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும்.இது, அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில், 1951ல் ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இக்கல்லூரி, நாட்டின் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரி ஆகும்.
NIRF 2022 புள்ளிகள் - 48.08 | அகில இந்திய தரவரிசை - 63
8. சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் சென்னை
சவீதா பல்கலைக்கழகம் (Saveetha University),
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடுத்த தண்டலத்திலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் அமைந்துள்ளன. எட்டு துறைகளில், கல்வி வழங்கிவருகிறது.சவீதா பல் மருத்துவக் கல்லூரி; சவீதா மேலாண்மைப் பள்ளி; சவீதா சட்டப் பள்ளி; சவீதா பொறியியல் பள்ளி; சவீதா இயன்முறை மருத்துவக் கல்லூரி; சவீதா செவிலியர் பயிற்சிப் பள்ளி; சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி. முதல் மூன்று கல்லூரிகள் பூந்தமல்லியிலும், மற்றவை தண்டலத்திலும் அமைந்துள்ளன.இவற்றில் சவீதா பொறியியல் கல்லூரி மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.
NIRF 2022 புள்ளிகள்- 45.13 | அகில இந்திய தரவரிசை - 77
9. பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், திருச்சிராப்பள்ளி அல்லது பிஐஎம்-திருச்சி என்பது, தமிழ்நாட்டில் திருச்சியில் 1984ல் நிறுவப்பட்ட ஒரு இந்திய வணிகப் பள்ளியாகும். பள்ளி AICTE அங்கீகரிக்கப்பட்ட முழுநேர MBA,முனைவர் மற்றும் பல நிர்வாக கல்வி திட்டங்களை வழங்கிவருகிறது. கல்லூரியானது, அதன் தொடக்கத்திலிருந்தே நாட்டின் நன்கு அறியப்பட்ட வணிகப் பள்ளிகளில் பெரும்பாலும் தரவரிசையில் உள்ளது.
NIRF 2022 புள்ளிகள் - 44.47 | அகில இந்திய தரவரிசை - 83
10. லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் சென்னை
லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA) என்பது 1979ல் லயோலா கல்லூரியின் வளாகத்தில் நிறுவப்பட்ட ஒரு முதன்மையான பி ஸ்கூல் ஆகும். லிபா என்ற பெயரிலும், இந்நிறுவனம் அழைக்கப்படுகிறது.
NIRF 2022 புள்ளிகள் - 44.02 | அகில இந்திய தரவரிசை - 86
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.