தினம் ஒரு கதை - நியாயமான வழியில் சேர்த்தப் பணம் தான்



முறைகேட்டில் சேர்த்தப் பணத்தை ஈட்டுபவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது; அந்தப் பணத்தைப் பலர் அறிய நிம்மதியாக அனுபவிக்கவும் முடியாது.

பணத்தை அனுபவிக்காமல், பிறருக்குக் கொடுக்காமல் இருப்பவனுடைய செல்வம், வீதியில் செல்பவர்களுக்குத் தான் சொத்தாகப் போய்ச் சேரும்’ என்பது பழமொழி.

வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள் ஆவது தான் பெரும் லட்சியம் என்று நினைக்கக் கூடாது.

பெரும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்றால் பெரும்பாலும் நேர்மையைக் கை விட வேண்டி இருக்கும்.

மேலும் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதில்லை.. இதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்..

நியாயமான வழிகளில் பணத்தைச் சேமிப்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

உழைத்து ஈட்டுகின்ற பணம் தான் திருப்தியையும் பெருமையையும் தரும்.

அதில் நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றும் நம் வியர்வையின் நினைவுச் சின்னங்களாக நீடிக்கும்.

ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார் எனக் குற்றம் சுமத்தப் பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப் பட்டார்.

நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?'

"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர். 

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார். 

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப் பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன் என்றார்..

இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்த படி நின்று கொண்டு இருந்தார்.

என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டு விடுங்கள் என்றார் நீதிபதி.. 

முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.'

"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லி தான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. 

இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. பேராசையின் தேவைகள் தான் 
அதிகம்.

உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. 
அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் பேராசைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..'' என்றார் நீதிபதி.

இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார். அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது.

மக்களை ஏமாற்றிச் சம்பாதிப்பவர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டிப் பொருளைப் பறிப்பவர்கள்.... யாரானாலும் பறித்த சொத்துக்கள் என்றைக்கும் நிலைக்காது.

கொண்டு போக முடியாத பொருளைச் சேர்ப்பதை விட, இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

இந்த உலகம் நமக்குப் பயன் பட்டதைப் போல், வரும் காலத்தில் வருபவர்களுக்கும் பயன் பட வேண்டும்.

Post a Comment

0 Comments