ஒ
*3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு!*
*6 மாத அகவிலைப்படி பறிப்பு!*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*
+++++++++++++++++++++
*தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அறிவிக்க வேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை 01.07.2022 முதல் அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு 01.07.2022 முதல் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் 01.01.2022 முதல் முன் தேதியிட்டு தனது ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:*
*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.*
*ஆனால், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் வழங்கியுள்ள 3% அகவிலைப்படி உயர்வை ஆறு மாதங்கள் கழித்து 01.07.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது நடைமுறைக்கு மாறாக உள்ளது.*
*ஒன்றிய அரசின் நிறுவனம் விலைவாசிப் புள்ளியைக் கணக்கிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கிறது. அதன்படி ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. அதைப் பின்பற்றி மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை செயல்படுத்துகின்றன. இந்த நடைமுறைதான் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் கடந்த ஆட்சியாளர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.*
*ஆனால், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழக அரசு அதைப் பற்றி சிந்திக்காமல் இருந்த நிலையில் பல்வேறு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால், 6 மாத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.*
*தற்போதைய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா காலகட்டத்தில் 18 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு வழங்கியபோது, அதைப் பின்பற்றி வழங்காமல் அப்போதும் 6 மாத காலம் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போதும் அதேபோன்று 6 மாத அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு காலதாமதமாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயர்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது. இது அரசு ஊழியர்களின் நலன்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் செயலாகும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது.*
*எனவே, 01.07.2022 முதல் வழங்குவதாக அறிவித்துள்ள 3% அகவிலைப்படி உயர்வை 01.01.2022 முதல் முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
+++++++++++++++++++++
*இப்படிக்கு*
*ச. மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
இதே போல தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பும் கோரிக்கை வைத்துள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.