1922, ஜூலை 15 இல் கோவில்பட்டியில் பிறந்த தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் தோழர் சங்கரய்யா இன்று 100 ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
தோழர் சங்கரய்யா வீடுதோறும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய விடிவெள்ளி ஏன்?
1.1940 களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில், இளங்கலை வரலாறு படித்தபோதே, விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு, தேசத்தின் விடுதலையே முக்கியம் என்று உண்மையான தேசப்பற்று என்னவென்று வாழ்வைத் தொடங்கியவர். அதற்காக சிறை சென்றவர்.
2. இளம் வயதிலேயே பொறுப்புகளை எந்தவித தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி தான் வரித்துக்கொண்ட பொதுவுடைமைத் தத்துவத்தை வீதிதோறும் எடுத்துச் சென்றவர். 22 வயதிலேயே ஒருங்கிணைந்த பொதுவுடைமை இயக்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் அவர்.
3. மொழி உரிமைக்காக போராடுவதில் எப்போதும் முன்னின்றவர், 1938 இல் இந்தி திணிப்பிற்கு எதிராய் கருப்பு கொடி காட்டி சிறை சென்றவர். மொழிவாரி மாநிலங்கள் அமைய காரணமான போராட்டங்களுக்கும் முன்னின்றவர்.
4. பொதுத்துறை நிறுவனங்களின் உயிர்ப்பும் வளர்ச்சியுமே தேசத்தின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதில் அசையா நம்பிக்கை கொண்ட அவர் நடத்திய, உடன் நின்ற போராட்டங்கள் ஏராளம், ஏராளம். கொரோனா காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் அவசியத்தை அனைத்து மக்களும் உணரத்தொடங்கியுள்ளது அய்யா போன்றவர்களின் தொடர் உழைப்பே.
5. ஆழ்ந்த வாசிப்பும், ஆழமான தமிழ், ஆங்கில அறிவும் கொண்ட அவரின், அடிவயிற்றிலிருந்து சீறி வரும் உணர்ச்சிமிகு உண்மை வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் எழுச்சி உரைகளால் தமிழ் மண்ணில் நிகழ்ந்த அரசியல், சமூக , பொருளாதார மாற்றங்கள், அவரை எப்போதும் தலை சிறந்த பேச்சாளர்களின் பட்டியலிலேயே வைத்திருக்கும்.
6. 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவான இன்று இந்திய அரசியல் தளத்தில் மிக முக்கிய பங்காற்றிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் இருவரில் ஒருவர். மற்றொருவர் அச்சுதானந்தன். தான் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை உயிர்ப்பிடிப்போடு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம்.
7. கொள்கை முரண் கொண்டிருந்தாலும், ஆட்சியாளர்களுடன் எப்போதும், சண்டையிட வேண்டும் என்னும் வறட்டு பிடிவாதமில்லாமல், பல நேரங்களில் மக்களின் நலனுக்காக, ஆட்சியாளர்களை ஆதரித்தவர், வழிகாட்டியவர். முன்னாள் முதல்வர்கள் MGR, கலைஞர் உள்ளிட்டோரின் பெரும் மரியாதைக்குரியவர்.
8. சாதிய, மத வேர்களை அறுத்தெறிய தானே முன்னுதாரணமாய் வாழ்ந்தவர். ஓர் கிறிஸ்தவரை மணந்தார். அவர் குடும்பத்தில் இல்லாத சாதிகளே இல்லை என்னும் அளவு சாதிமறுப்பு திருமணத்தை ஆதரிப்பவர்.
9. எப்போதும் எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர். தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவராக இருந்தபோதும் தன்னை பார்க்கும் மருத்துவர்களிடம் கூட வரிசையில் சென்றே மருத்துவம் பார்த்துக்கொள்வார். ஆனால் அவரின் மீது பெரும் மதிப்பு கொண்ட அவரது தோல் நோய் மருத்துவரான பேட்ரிக்
யசுதீன், இதய மருத்துவர்களான K. சுப்பிரமணியன், ராஜேஸ்வரி நாயக், சிறுநீரக மருத்துவர் ஜோசப் விதாச்சில் ஆகியோர் அவர் வந்ததை அறிந்தால் உடனே அழைத்துவிடுவர். அய்யா அவர்கள் அந்த வருகை தெரியப்படுத்தாமல்தான் இருப்பார்.
10. முதலாளித்துவத்தை எதிர்கொண்டு தொழிலாளர் வர்க்கம் பெறும் வெற்றியே உலகின் அத்தனை பெருஞ்சிக்கல்களுக்கும் தீர்வு என்னும் தான் நம்பும்
பொதுவுடைமை தத்துவத்தின் மீது தீராத பற்று கொண்டு, அதை நடைமுறைப்படுத்த அதன்மூலம் விளிம்பு நிலை மக்களின் விடியல் காண 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 80 ஆண்டுகள் தியாகம் நிறைந்த பொதுவாழ்க்கை என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் விளிம்புநிலை மக்களின் உயர்விற்காய் போராடி, உழைத்து பிரகாசமாய் ஒளிர்பவர் தோழர் சங்கரய்யா.
அதனால் அவர் வீடு தோறும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளி...
இன்னும் நூறாண்டுகள் ஒளிரட்டும் அந்த விடிவெள்ளி..
நம்பிக்கையோடு
Dr.ச.தெட்சிணாமூர்த்தி, MBBS.,DDVL.,
தோல் நோய் சிறப்பு மருத்துவர்,
தலைவர்,
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்
9159969415
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.