தினம் ஒரு கதை - வாக்கு

ஒரு கதை சொல்லட்டுமா சார் ..!

கடும் குளிரான இரவொன்றில் சாலையோரம் நடைபாதையில் ஏழை முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பதை பணக்காரர் ஒருவர் பார்க்கிறார்.
   
    "குளிருக்கு தேவையான எந்த ஆடைகளும் இல்லாமல் எப்படி உங்களால் வெட்ட வெளியில் இருக்க முடிகிறது", என்று அந்தப் பணக்காரர் கேட்கிறார்.. "குளிரைத் தாங்கும் அங்கி எதுவும் என்னிடம் இல்லை. அவற்றை வாங்குவதற்கு என்னிடம் பணமும் இல்லை. அதனால் எனக்கு இந்தக் குளிர் பழகிவிட்டது", என்று கூறுகிறார்.

அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட அந்தப் பணக்காரர், "இருங்க, நான் வீட்டுக்கு போய் உங்களுக்கு இந்த கடும் குளிரை சமாளிக்கும் விதமாக ஒரு அங்கியை எடுத்து வருகிறேன்" என்று சொல்கிறார். அதைக் கேட்டதும் அந்த முதியவர் மிகுந்த சந்தோஷப்பட்டு அங்கியோடு பணக்காரர் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

வீட்டுக்கு சென்ற பணக்காரர் வேலை மும்முரத்தில் அந்த ஏழை முதியவரை மறந்து விடுகிறார்.. வேலைகளை முடித்துவிட்டு அப்படியே தூங்கிப் போய் விடுகிறார். காலை எழுந்தவுடன் முதியவர் ஞாபகம் வரவே உடனடியாக அங்கியை எடுத்துக்கொண்டு முதியவரை சந்தித்த இடத்திற்கு செல்கிறார்.

அங்கு சென்று பார்த்த போது முதியவர் கடும் குளிரால் இறந்து போய் கிடக்கிறார். அருகில் உள்ள ஒரு அட்டையில் என்னிடம் குளிர் தாங்க கூடிய ஆடைகள் எதுவும் இல்லை. இருந்தாலும் குளிரை எதிர்த்துப் போராட நான் பழகி இருந்தேன்.. நீங்கள் எனக்கு உதவுவதாக வாக்களித்தீர்கள். நான் உங்கள் வாக்கை நம்பி இருந்ததால் குளிரை எதிர்த்துப் போராடும் என்னுடைய சக்தியை இழந்து விட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.

 கதை நீதி :-

உங்களால் நிறைவேற்ற முடியாத எந்த ஒரு வாக்கினையும் யாருக்கும் கொடுக்காதீர்கள். ஒருவருக்கு நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு அது எல்லாமுமாக இருக்கக்கூடும்.

Post a Comment

0 Comments