தினம் ஒரு கதை - இல்லாதவர்களுக்கு உதவுவோம்

இன்றைய சிந்தனை...

    ''இல்லாதவர்களுக்கு உதவி செய்..''*
...........................................

பிறருக்கு உதவி செய்து வாழ்வது தான் நல்ல வாழ்க்கை. அது தான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்! அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்..

உதயன் என்னும் மாணவன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அப்பா சுந்தர்...ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனைக் கடையில் பழுது பார்ப்பவராக வேலை செய்கிறார்.

குடும்பத்தை நடத்தும் அளவுக்கு மட்டுமே சம்பாதிக்கிறார். இருந்தாலும், தன் ஒரே மகனின் ஆசைகளை துயரப்பட்டாவது நிறைவேற்றி வைக்க விருப்பமுள்ளவர்.

உதயன் தினசரி பள்ளிக்கு நடந்துப் போகும் வழியில், அந்த செருப்புக் கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும் விதவிதமான காலணிகளைப் பார்த்து பெருமூச்சு விடுவான்.

அங்கே சிவப்புக் கலரில் மிதிக்கும் போது குதிகால் பகுதியில் விளக்கு எரியுமாறு இருந்த ஒரு செருப்பை மிகவும் விரும்பினான்.

தன் அப்பாவிடம் ஒரு நாள் அதைக் காட்டி அதனை அணிய ஆசையென்று கொஞ்சினான். அருகில் சென்று விலையைப் பார்த்த சுந்தர் அயர்ந்தார்.அவரால் அப்போதைக்கு வாங்கித் தர முடியாத விலையாக இருந்தது.

அப்போதைக்கு தன்னால் முடியாது என மகனுக்கு சமாதானம் செய்தார். இருந்தாலும்,தன் மகனுக்கு அதை வாங்கித் தந்து விட வேண்டுமென சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தார்.

ஒருநாள் தன் மகனை அழைத்துக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்று அவனுக்கு அந்தச் செருப்பை வாங்கித் தருவதாய் மகிழ்வுடன் சொன்னார்.

ஆனால் தன் மகனிடம் அவர் எதிர்பார்த்த உற்சாகம் இல்லை. அவன் அப்பா சுந்தர் ஆச்சரியப்பட்டார்.

 உதயா...மகிழ்ச்சியாக இல்லையா. உனக்கு?உனக்குன்னு தான் பணம் சேர்த்தேன்... வாங்கிக்கடா" என்றார்.

''அப்பா...இந்தப் பணம் எனக்கு செருப்பு வாங்கறதுக்காக மட்டுமே தானப்பா..?

ஆமாம் என்றார் அவன் தந்தை..

"அப்படீன்னா....இந்தப் பணத்துல கம்மி விலையில ஒரே மாதிரி ரெண்டு ஜோடி செருப்பு வாங்கித் தாங்கப்பா" என்ற உதயனை புரியாமல் பார்த்த அவன் தந்தை சுந்தர்.,

"ஏன் உதயா அப்படிச் சொல்ற உனக்கு இரண்டு ஜோடி எதுக்கு?"

''ரெண்டும் எனக்கில்லப்பா. என் கூட ஒரு பையன் படிக்கிறான். அவன் பெயர் குமார். ரொம்ப ஏழைப்பா. அவங்கப்பா. கூலி வேலை செய்யறாங்க.கால்ல செருப்பில்லாம வெயில்ல நடந்து வராம்ப்பா. 

இதுல ஒண்ண அவனுக்குக் குடுத்தா... சூட்டுல நடக்க வேண்டியதில்ல...என் கிட்ட இருக்கிற மாதிரியே அவன் கிட்டயும் இருக்குன்னா மகிழ்ச்சிப்படுவான் இல்லையாப்பா?"

தன் மகனின் உதவும் மனதைப் பார்த்து... அவனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

உதவ வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம்
இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறார்கள்..

சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால் தான் இன்னமும் மனித குலம் உயிரோடு வாழ்கிறது..

*இல்லாதவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவோம், அவர்களின் கண்ணீர் துடைப்போம்.*

Post a Comment

0 Comments