*''மன்னிப்பு...''*
.......................................
எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.
மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது..
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் பண்பு தானே முளை விடும்.
ஒரு மன்னன் வேட்டையாடுவதற்காக ஒரு காட்டிற்கு சென்றான். வேட்டை ஆடுவதில் அவனுக்கு சற்று ஆர்வம் அதிகம் என்பதால் நேரம் போவதே தெரியாமல் வேட்டையாடிக் கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக இருளும் சூழ ஆரமித்துவிட்டது.
இந்த நிலையில் ஒரு மரத்தில் மிகப்பெரிய மிருகம் ஒன்று இருப்பதுபோல அவன் உணர்தான்.
நாம் அந்த மிருகத்தை தாக்கா விட்டால் நம்மை அது தாக்கக் கூடும் என்று எண்ணிய மன்னன் அந்த மிருகத்தை நோக்கி அம்பை எய்தினான்.
உடனே, ''ஐயோ அம்மா'' என்ற அலறல் சத்தம் கேட்டது. என்ன இது மிருகத்தின் மீதல்லவா? அம்பை எய்தினோம்.. ஏன் இப்படி ஒரு அலறல் சத்தம் என்று திகைத்த மன்னன் அந்த மரத்தருகில் சென்றான்.
அங்கு பார்த்தால் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மடிந்து கிடந்தான். மன்னனுக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற அவன், தன் மந்திரியை அழைத்து இந்த காட்டிற்குள் எங்காவதுதான் இவன் தாய் தந்தையர் இருக்கக் கூடும் உடனே அவர்களை அழைத்து வாருங்கள் என்று கூறினான்.
மந்திரி சில காவலாளிகளை அழைத்துக்கொண்டு விரைந்தார். சிறுது நேரம் கழித்து விறகு வெட்டிக் கொண்டு இருந்த ஒரு தம்பதியினரை மந்திரி அழைத்து வந்தார்.
அரசே, இவர்கள் தான் அந்த சிறுவனின் தாய் தந்தையர் என்று அவர் கூறினார்.
அவர்களிடம் மன்னன் நடந்ததை கூறி, நான் இந்த தவறை தெரியாமல் செய்து விட்டேன் என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டான்.
ஆனால் அவர்கள் தன்னை மன்னிக்க வில்லை என்பதை மன்னன் உணர்ந்து கொண்டான்.
மந்திரியை அழைத்து இரண்டு தட்டுகளை கொண்டு வரச் சொன்னான். பின் ஒரு தட்டில் தான் அணிந்து இருந்த விலை மதிப்பற்ற நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்தான். இன்னொருதட்டில் தன் உடைவாளை வைத்தான்.
பின் அவர்களிடம்,
'' என்னை நீங்கள் மன்னிக்க விரும்பினால் இந்த தட்டில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்''.
இல்லை,'' நீங்கள் என்னை தண்டித்தே தீரவேண்டும் என்று எண்ணினால் இந்த உடைவாளை எடுத்து என் கழுத்தை சீவி விடுங்கள் என்று கூறி அவர்கள் முன் மண்டியிட்டான்''.
நீண்ட மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தார்.
என் மகனே சென்ற பிறகு இந்த விலை மதிப்பற்ற நகைகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?
நான் மன்னனின் தலையை கொய்யவும் விரும்ப வில்லை. எப்போது அவர் தன் தவறை உணர்ந்து என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரோ
அப்போதே அவரை நான் மன்னித்து விட்டேன். இவரை கொல்வதால் எனக்கு என்ன பயன், என்று கூறி தன் பேச்சை முடித்தார்.
மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது.. மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது.
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.
மன்னிப்புக் கேட்காதவர் களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.
வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.