தினம் ஒரு கதை -அடுத்தவர்கள் பேச்சை நம்பி யாரையும் வெறுக்க வேண்டாம்

அடுத்தவர்கள் பேச்சை நம்பி யாரையும் வெறுக்க வேண்டாம்!

* 🌹🌹🌹ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் அடுத்தவர்கள் சொல்வதை வைத்து மட்டுமே அவரை வெறுப்பது சரியாகாது. ஏனெனில், உண்மையிலேயே அந்த நபரின் குணம் தங்கமாக இருக்கலாம். ஏனவே, எப்போதும் முழுமையான உண்மையை தெரிந்துக் கொள்ள முற்படுவது சிறந்தது. இந்த தத்துவத்தை புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் நன்றாக பாடக்கூடிய பாடகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த ஆண்டு அந்த பாடகரின் கிராமத்தில் சரியாக மழையில்லாததால் வறட்சி ஏற்படுகிறது. இதனால் பாடகரின் குடும்பம் வறுமையில் வாடியது. இப்போது இந்த பாடகருக்கு வேறு வழியில்லை. அவர் வேறு ஏதேனும் செழிப்பான நாட்டிற்கு சென்று செல்வத்தை தேட வேண்டும். அதனால், அந்த பாடகர் தான் மட்டும் வேறு ஒரு நாட்டிற்கு பிரயாணம் பண்ணிப் போகிறார்.

இப்போது அந்த பாடகர் வந்திருக்கும் நாடு நல்ல செழிப்பு மிக்க நாடுதான். அந்த நாட்டை வீரம் மிகுந்த மன்னன் ஆட்சி புரிந்து வந்தார். பாடகர் எப்படியாவது அந்த மன்னனைப் போய் பார்த்து பாட்டுப்பாடி செல்வத்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம். இருப்பினும், அங்கிருக்கும் மக்களிடம் மன்னனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது அங்கிருந்த இசைக்கலைஞர்களிடம் மன்னனை பற்றிக் கேட்கிறார்.

அவர்களோ மன்னன் எங்களையே சரியாக கண்டுக்கொண்டதில்லை இதில் வெளியூரில் இருந்து வந்திருக்கும் உங்களையா உபசரிக்கப் போகிறார் என்று கூறிவிடுகிறார்கள். இருந்தாலுமே, பாடகர் நாமே மன்னனை சந்தித்து கேட்டுவிடுவோம் என்ற எண்ணத்தில் அரண்மனைக்கு செல்கிறார். அங்கிருந்த காவலர்களிடம் தன்னைப்பற்றிக்கூற அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். உங்களுடைய திறமையைக்காட்ட வேறு இடமே கிடைக்கவில்லையா?

இந்த நாட்டு ராஜாவிற்கு சுத்தமாக இசை ஞானமே கிடையாது. அவருடைய மகள் சென்றுக்கொண்டிருந்த இசைப்பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு கத்திச் சண்டையை கற்றுக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டார் என்று கூறினார்கள். இதனால் மனம் நொந்துப் போன பாடகர் நேராக கோவிலுக்கு சென்று அங்கே அமர்ந்துக்கொண்டு தன் நிலையை நினைத்து வருத்தப்பட்டார். அவர் கையிலே இருந்த வீணையை மீட்டி மிகவும் சோகமான ராகத்தில் சோகமான பாடலைப் பாடத்தொடங்கினார்.

பாடிக்கொண்டிருக்கும் போதே ஒரு கை அவர் தோல் மீது பட்டது யார் என்று பாடகர் திரும்பி பார்த்தார். அது வேறு யாருமில்லை அந்த நாட்டு அரசர்தான். அரசரும் அந்த சமயத்தில் கோவிலில்தான் இருந்திருக்கிறார். இவருடைய சோகமான பாடல் அவர் மனதை ஏதோ செய்யவே அதைத் தேடி வந்துள்ளார். இப்போது அரசர் இவர் யார் என்பதை விசாரிக்கிறார். பாடகரும் தன் நிலையை அரசரிடம் எடுத்துச் சொல்கிறார். உடனே அரசர் தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை கழட்டி பாடகரிடம் கொடுக்கிறார். இதைப் பார்த்த பாடகருக்கு ஒரே வியப்பு.

இவ்வளவு நேரம் இந்த ஊரிலே உள்ளவர்கள் அரசரைப் பற்றி சொன்னதற்கும் அரசர் நடந்துக்கொள்வதற்கும் சம்மந்தமேயில்லாமல் இருந்தது. இதை பாடகர் அரசரிடமே கேட்டுவிட்டார்.

அதற்கு அரசர் என்ன பதில் கூறினார் தெரியுமா? அந்த நாட்டிற்கு எதிரி நாட்டிலிருந்து போர் வரப்போவதை அரசர் அறிந்திருந்தார். அந்த சமயம் கலைஞர்கள் விழா எடுக்க வேண்டும் என்று அரசனிடம் கேட்க, அவர் அதை வேண்டாம் என்று நிராகரித்தார். அதைப்போலவே அரசருக்கு பின் இந்த நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு இளவரசிக்கு இருப்பதால்தான் இளவரசியை தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள அனுப்பினேன் என்று கூறினார். இப்போதுதான் அரசரின் உண்மையான குணம் பாடகருக்கு புரிந்தது.

இந்தக் கதையில் வந்தது போலத்தான் மற்றவர்களின் அபிப்ராயத்தை வைத்து நாம் ஒருவரை எடை போடுவது என்பது தவறாகும். ஒருவர் இருக்கும் சூழ்நிலை தெரியாமல், நிலைமை புரியாமல் அவரைப் பற்றி தப்பான அபிப்ராயத்தை வளர்த்துக் கொள்வது சரியாகாது. இதனால் யாருக்கு நஷ்டம் தெரியுமா? யார் எதை சொன்னாலும் நம்பும் நபருக்கும், தவறே செய்யாமல் பழியை சுமக்கும் நபருக்கும்தான். இதைப் புரிந்துக் கொண்டால் போதும் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

🌹🌹🌹

Post a Comment

0 Comments