ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த நிறை மாத கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம். விழுந்த இடத்திலிருந்து 8 கிமீ தள்ளி நின்ற ரயில்.

உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கர்ப்பிணி இறந்து கிடந்தார்.

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

கடலூர்,

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை.

பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.


போலீசார் விசாரணையில் வெளியான தகவல்:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது.

உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அபாய சங்கிலியை இழுத்தும் நிற்காத ரெயில்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில்தான் கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்தார். கை கழுவும் இடத்தில் இருந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தபோது கஸ்தூரி தவறி கீழே விழுந்தார். உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

 

ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், வரும் காலங்களில் அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கலி செயல்படுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments