ஒரு ஊரில் ஒருவன் மிகுந்த சிரமப்பட்டு பல கலைகளை கற்றுக் கொண்டான். அந்த கலைகளில் ஒன்று, தன்னைப் போலவே நிறைய வருவங்களை உருவாக்கும் கலை.
பல பேர் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, போனார்கள். சில பேர் அவனை வழிபடவும் ஆரம்பித்தார்கள்.
இதன் விளைவு அவன் மனம் கனமாக தொடங்கியது. கர்வம் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டது. என்னால் முடியாதது எதுவும் இல்லை, என எகத்தாளமாய் கூறினான்.
ஆமாம் உண்மைதான் என்றார்கள், அவனை வணங்கியவர்கள்.
அவனது இறுதி காலமும் நெருங்கியது. இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டிய நேரம். அவனை அழைத்துக் கொண்டு போக கால தேவன் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டான். நீங்கள் எதற்கு? நானே போய் அவனை அழைத்து வருகிறேன், என புறப்பட்டது மரண தேவதை.
சரி போய் வா, என்றான் கால தேவன்.
மரண தேவதை வந்து கொண்டிருக்கும் செய்தி, இவனுக்கு வந்து சேர்ந்தது.
தப்பிக்க என்ன வழி என யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான். தன்னைப்போலவே இன்னும் பத்து பேரை உருவாக்கினான்.
மரண தேவதை இவன் இருப்பிடம் வந்து பார்க்கிறாள். இவனைப் போலவே 11 பேர் இருப்பதை காண்கிறாள். ஒரே குழப்பம். இதில் யார் உண்மையானவன் என்று? எப்படி கண்டுபிடிப்பது என்று தன்னுடைய இயலாமையை அறிந்து விண்ணுலகம் திரும்பினாள்.
கால தேவனிடம் போய் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். என்னால் அந்த மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாள்.
உண்மையான மனிதனை கண்டுபிடிக்க, சுலபமாக ஒரு வழி இருக்கிறதே!
என்ன வழி அது?
கால தேவன், தேவதையின் காதில் ரகசியமாக அந்த வழியை கூறினான். தேவதையின் முகம் மலர்ந்தது.
சரி நானே மறுபடியும் போகிறேன், எனக் கூறிவிட்டு கிளம்பினாள்.
இங்கே மறுபடியும் அந்த 11 பேரும் வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
தேவதை சொன்னாள், ஏ மனிதனே உன்னுடைய திறமை என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. உன்னால் முடியாதது எதுவுமில்லை. ஒப்புக்கொள்கிறேன்! உன்னை போல பத்து பேரை உருவாக்கி விட்டாய். ஆனால் ஒரு சிறு குறை இருக்கிறது. அதை வைத்து நான் உன்னை கண்டுபிடித்து விட்டேன், என்றாள்.
அந்த 11 பேரில் ஒருவன் முன்னாள் வந்தான். அவனுக்கு கோபமே வந்துவிட்டது. இருக்கவே இருக்காது என்ன குறை சொல்லுங்கள், என கத்தினான்.
*இதுதான் அந்தக் குறை,* எனக் கூறிக் கொண்டே தேவதை அவன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள்.
நான் என்ற கர்வம் பொதுவாக மனிதர்களிடத்தில் உள்ள மிகப்பெரிய குறை, அதை களைந்து விட்டால் நிறைய நன்மைகள் உண்டு.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.