மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புங்கள் அமைச்சர் வேண்டுகோள். மாணவர்களின் 10 நாள் கல்வி இழப்பை 10 மணி நேரத்தில் மீட்டெடுப்போம். எங்கள் நலன் கருதி நீங்கள் நல்ல முடிவு எடுங்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே.. ஆசிரியர்கள் வேண்டுகோள். .

எங்கள்  மாணவர்களின்  10 நாள் கற்றல் இடைவெளியை  10 மணி நேரத்தில் நாங்கள்  போக்கிவிடுவோம்.  என்று  நம்பிக்கையுடன் கூறுவது.  10 நாட்களாக பள்ளியைப் புறக்கணித்து போராடும் ஆசிரியர்களின்  பணி திறனையும்.  பணியை  நேசிப்பதையும் காட்டுகிறது.  
யார் இவர்கள்?  
என்னதான்  பாதிப்பு  இவர்களுக்கு?  


முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் 31.05.2009 க்கு முன்  பணியேற்ற இடைநிலை ஆசிராயர்களுக்கு 8300 ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிவிட்டு.  அடுத்தநாள்  01.06.2009 க்கு பிறகு பணியேற்ற அதே கல்வித்தகுதி அதே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5200 ஊதியமாக நிர்ணயம் செய்து  ஒரே பணிக்கு  2 வகையான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. 
அன்று முதல் அனைத்து  ஆசிரியர் சங்கங்களும் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும்  மத்திய அரசுக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.  பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழுக்களிலும்.  மற்ற சில உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு  சில சலுகைகளை வழங்கிய குழு  இடைநிலை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க முடியவே முடியாது என ஏற்றுக்கொள்ளவே இயலாத பல காரணங்களை காட்டி மூட்டை கட்டி வைத்து விட்டது.  

ஆனால்  SSTA என்ற பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் இயக்கம் மத்திய அரசுக்கு இணையான ஊதிய கோரிக்கைக்கு முன்பு  , உடன் பணியாற்றும் சக மாநில அரசு  இடைநிலை ஆசிரியர்களுக்கு  இணையான சம ஊதியம் வழங்க வேண்டும்  என்ற ஒற்றை கோரிக்கையை  முன் வைத்தது.  இதை ஆரம்பத்தில்  தவறான கோரிக்கை  என்று பல்வேறு தடைகளையும், காரணங்களையும் பலர் கூறினர்.  

இந்த ஒற்றைக்கோரிக்கையின் நியாயத்தை 2009 க்குப்பின் பணியேற்ற  இடைநிலை ஆசிரியர்கள்  ஆரம்பத்தில் புரிந்து கொள்ளை முன்வரவில்லை.  7 வது  ஊதிய குழுவில்தான்  புரிந்தது 2009 க்கு  பின் பணியேற்ற ஆசிரியர்களுக்கு துப்பரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது.  

இந்த ஊதிய இழப்பை நன்கு உணர்ந்து கொண்ட 2009 க்கு பின்னர் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் இந்த சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை  கோரிக்கையை முன்னெடுத்துச் சென்ற  SSTA அமைப்பின் பின்னால் வலுசேர்த்து  நின்றனர்.  
அதன் தொடர்ச்சியாக மாணவர்களின்  கல்வி பாதிக்கப்படக்கூடாது  என்பதில் மிகக்கவனமாக இருந்த  SSTA அமைப்பு அனைத்து விடுமுறை ( காலாண்டு,  அரையாண்டு,  முழாண்டு)  நாட்களிலும் பல கட்ட உண்ணாவிரதப்போராட்டத்தை பல ஆட்சியாளர்கள் காலத்திலும் நடத்தியது.  அப்போது  எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததோடு நில்லாமல் தங்களது  சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியிலும் 20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு  சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.  (வாக்குறுதி எண்  -311)

ஆட்சிக்கு வந்து  2 ஆண்டுகள்  எந்த முன்னேற்றமும் இல்லை.  கொரோனா காலகட்டத்தில் SSTA அமைப்பு ஆசிரியர்களிடம் நன்கொடையாகப்பெற்று   பல லட்சம் ரூபாய் நிதியாக முதலமைச்சருக்கு வழங்கி அரசுக்கு உறுதுணையாக இருந்தது.  

கொரோனாவுக்கு பிந்தைய மாணவர்களின் கற்றல் இடைவெளியை நீக்க அரசு கொண்டுவந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக கொண்டு செல்வதில் இடைநிலை ஆசிரியர்களின் பங்கு அளப்பறியது என்பது  அதிகாரிகள் , அமைச்சர்  மட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் .
எல்லாம் சரி ......நிதிநிலை கருத்தில் கொண்டு  2 ஆண்டு  பொறுத்திருந்த SSTA & 2009 , TET ஆசிரியர்கள்   கோரிக்கை மட்டும் கிடப்பிலேயே இருப்பதை சற்றும் எதிர்பாராததால்  கடந்த 2022 டிசம்பர் அரையாண்டு விடுமுறையில்  தொடர் உண்ணாவிரதப் போராட்டம்  நடத்தினர். 

 அப்போது  முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  பாதிக்கப்பட்ட 20000 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரணை ஏற்றுக்கொண்டு தனியாக ஒரு 3 நபர் குழு அமைத்து 3 மாதத்தில் குழு அறிக்கை பெற்று  தீர்வு காணப்படும்  என்று அரசாணை எண். 25 வெளியிடப்பட்டது.  

குழுவையும்,  முதல்வரையும்,  அமைச்சரையும் நம்பி போராட்டத்தை கைவிட்டு 2023 ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு அன்று  போராட்டத்தை  தற்காலிகமாக ஒத்திவைத்தார்கள்.  

ஆனால்  முதல்வரால் உருவாக்கப்பட்ட குழு  பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்கத்தை மட்டுமல்லாமல்  அனைத்து  ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து கருத்து  கேட்க துவங்கியது.  3 மாதத்தில்  முடிவடைய வேண்டிய குழு  9 மாதம் கடந்து  ஆமை வேகத்தில் நகர்ந்ததால்   மீண்டும்  அடுத்த  உண்ணாவிரதப் போராட்டத்தை 2023 முதல் பருவ விடுமுறையில்  DPI ல் துவக்கியது  SSTA.  
இம்முறை  களம்  வேறுமாதிரியாக  அமைந்தது.  அதே  இடத்தில்  பல்வேறு பல்வேறு அமைப்புகள்  திட்டமிட்டோ  திட்டமிடாமலோ  போராட்டத்தில் வெவ்வேறு  கோரிக்கைக்காக போராடினர். 

 பயிற்சியையும் புறக்கணித்து 8 நாளைக்கடந்த SSTA  உண்ணாவிரதத்தில் பல நூறுக்கும்  மேற்பட்டோர் மயக்கமுற்று உடல்குன்றி  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு  ஆசிரியர்களுடன்  SSTA அமைப்பின் பொதுச் செயலாளர் திரு இராபர்ட் அவர்களும்  மிகுந்த உடல்நலக்குறைவிற்கு ஆட்பட்டார்.   பல்வேறு  சங்கங்கள்,  கட்சிகள்  ஆதரவு  வழங்கியது அரசுக்கு  பெரும் நெருக்கடியை உருவாக்கியது .

 இறுதியாக அறவழியில் போராடிய ஆசிரியர்களை  கைது செய்ய துவங்கியது . களத்தில் இருந்த  பல்வேறு அமைப்புகள்  தலைதெரிக்க ஓடிய நிலையில்  SSTA மட்டும் களத்தில் நின்றது.  

கைது செய்து  மண்டபத்தில் அடைத்த அத்தனை ஆசிரியர்களும்  உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.  பெரும் நெருக்கடிக்கு ஆளான அரசு  அனைவரையும்  இரவோடு இரவாக  தங்களது  வாகனத்திலேயே  சென்னைக்கு  வெளியே  சென்று விட்டது.   சிலரை  திரும்ப வரக்கூடாது என மிரட்டியதாகவும் தகவல். 
உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்னும் 3 மாதத்தில்  குழு அறிக்கை பெற்று  அவண செய்யப்படும்  என அதே  பழைய பல்லவியை  பாடி போராட்டத்தை  அரசு  முடிவுக்கு  கொண்டுவந்தது.  

அப்போதுதான்  அரசு  இந்த  அமைப்பின்  ஒற்றுமை ,  வழிநடத்தல்,   போர்க்குணத்தை நன்கு உணர்ந்தது .


மீண்டும் பொறுமை இழந்த ஆசிரியர்கள், குழு மீண்டும் கேட்ட 3 மாத அவகாசம்  5 மாதத்தை கடந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது  கடந்த  19.02.2024 முதல் சென்னையிலும்  மாவட்டந்தோறும் பள்ளியைப் பறக்கணித்து  தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்  

விடுமுறை அல்லாத நாளில் பள்ளியைப் புறக்கணித்து SSTA அமைப்பு செய்யும் முதல்  போராட்டம்.  இன்று  (28.02.204 ) 10 வது  நாளைக்கடந்தும்  அரசு  எவ்வித பேச்சுவார்த்தைக்கும் செவிமடுக்காத சூழலில்.  இன்று முதல்  தினமும்  போராட்ட வியூகம்  மாற்றியமைக்கப்பட்டு தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
நேற்று  27.02.2024 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்  ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளார்.  அதில்  மாணவர்களின் தேர்வுகாலம்  நெருங்குவதால் கல்வி நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.  
அதற்கு  எதிர்வினையாக பல்வேறு ஆசிரியர் நேர்மறையான நாகரிகமான கருத்துகளை தெரிவித்து  வருகின்றனர் 

🌺ஒரு  ஆசிரியை  கூறும் போது  . மாணவர் கல்வி நலனை  பொறுத்தவரை  எங்களுக்கு அடுத்துதான் அடுத்தவர்கள் அனைவருமே   . 

🌺எங்கள் நலனை  கருத்தில் கொண்டால்  மற்ற நலன் தானாக நடைபெறும். 

🌺கொரோனா கால கற்றல் இடைவெளியை ஒரு பருவத்திற்குள்ளேயே மீட்டெடுத்து கொண்டுவந்தவர்கள்  நாங்கள்.  எங்களுக்கு பாடம்நடத்த எந்தவிதமான அவசியமும்  தற்போது  ஏற்படவில்லை.  

🌺எங்கள் மாணவர்களுக்கு 10 நாள்களுக்கான குறிப்பேட்டில் எழுதுதல்,  எண்ணும் எழுத்தும் குறிப்பேட்டில் படித்தல்  என அனைத்து  கற்றல் செயல்பாடுகளும் கொடுத்துவிட்டுதான் வந்துள்ளோம். 

🌺மாணவர் நலனில் அக்கறை இருந்தால் இந்த  அரசு  அழைத்துப்பேசி  நீங்கள்  கொடுத்த வாக்குறுதியான 311 என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்  வேலையை துவங்கலாம். 

🌺எங்கள்  மாணவர்களின்  10 நாள் கற்றல் இடைவெளியை  10 மணி நேரத்தில் நாங்கள்  போக்கிவிடுவோம்.  அதற்கு அமைச்சர் கொண்டாடிய  எங்கள்  மாணவர்களின் பெற்றோர்களே  சாட்சி  என்று  நம்பிக்கையுடன் கூறுவது.  அவர்களின் பணி திறனையும்.  பணியை  நேசிப்பதையும் காட்டுகிறது.  
எனவே  மிகுந்த  ஊதிய இழப்பிற்கு  உள்ளான இந்த  ஆசிரியர்களை  அழைத்து பேசி தேர்தல் வாக்குறுதி  311 ஐ நிறைவேற்ற வேண்டும்  என்பது  அனைத்து  ஆசிரியர் அமைப்புகள்  மற்றும்  கல்வியாளர்கள்,   பெற்றோர்கள்  , மாணவர்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.  

சமூக நீதி ஆட்சியில் விடியல்  ஏற்படுமா?  

நல்லதே  நடக்கட்டும் 
 Article by 
JUST RELAX TEACH

Post a Comment

0 Comments