தினம் ஒரு கதை - காலம் மாறிப் போச்சு

 காலம் மாறிப் போச்சு


விரைவாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் ராகவன். அவனுக்குப் பிறந்த நாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த டிரஸ் ரொம்ப பிடிச்சி இருந்தது. அதைத் தேடிக் கொண்டிருந்தான்.


“அம்மா என்னுடைய டிரஸ் எங்க வச்சீங்க? எனக்கு வந்து எடுத்து கொடுங்க எனக்கு காலேஜ்க்கு லேட்டாச்சு சீக்கிரம் கிளம்பனும். சீக்கிரம் வாங்கம்மா”


“இருடா வாரேன்! தேடிப் பார்க்கக்கூட சோம்பேறித்தனம். இரு வாரேன் எடுத்து தாரேன் உங்க அப்பாவை போலவே ரொம்ப சோம்பேறித்தனம் டா உனக்கு”


“இந்த டிரஸ் தானே டா “


“ஆமாம்மா கொடுங்க”


“என்னோட ஜீன்ஸ் பேண்ட் எங்க இருக்கு?”


“ரெண்டும் ஒன்னா தாண்டா இருக்கு. சட்டையும் பேண்டும் ஒன்னாதான் மடிச்சு வச்சிருக்கேன். இந்தா நல்லா எடுத்து சட்டையையும் பேண்டையும் விரிச்சு பாருடா”


“சரிங்க அம்மா” என்று சொல்லிவிட்டு டிரஸ்சை அணிந்து கொண்டு சாப்பிடுவதற்காக வந்தான் ராகவன்.


இட்லி சூடாக இருந்தது.சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை அம்மா உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.


“டேய்! இது என்னடா பேண்ட்? காலுக்கு கீழே ரொம்ப கிழிந்து இருக்கிறாப்ல இருக்கு. நூலெல்லாம் வெளியே தொங்கிக்கிட்டு இருக்கு. என்னடா ஆச்சு போன மாசம் வாங்குறப்ப நல்லா தான்டா இருந்துச்சு”


“நான்தான்மா கொஞ்சம் ஸ்டைலா இருக்கணும்னு கொஞ்சம் பிளேடு வச்சு கொஞ்சம் ஒரு மாடிஃபிகேஷன் பண்ணி வச்சிருக்கேன்”


“என்னமோ பண்ணு. எனக்கு தெரியாதுப்பா. உங்க அப்பா பார்த்தார்னா உன்ன உண்டு இல்லை என்று பண்ணிருவாரு”


“சரிமா நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்”


“சரிடா ராகவா பார்த்து போயிட்டு வா” என்றார் அம்மா.


கல்லூரிக்குள் ராயல் என்ஃபீல்டு பைக்கில் தோரணையாக வந்து இறங்கினான் ராகவன்.


மணி ஒலித்தது.


அனைவரும் வகுப்பறைக்குள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


கந்தசாமிக்கு வீட்டில் இருந்து வரும் போது கொஞ்சம் தாமதமாகி விட்டது. அதனால் மெதுவாக கல்லூரிக்குள் வந்து வகுப்பறையின் முன் நின்றான்.


“உள்ளே வரலாமா சார்?” என்றான்.


அவனின் தோற்றத்தைப் பார்த்து வகுப்பறை முழுவதும் சிரிப்பலை ஒலித்தது.


“ஏம்பா லேட்டா வர்ர கந்தசாமி”


“பஸ் கொஞ்சம் இன்னைக்கு லேட்டா தான் சார் வந்துச்சு. அதனால தான் கொஞ்சம் தாமதமாயிருச்சு. இனிமே இப்படி லேட்டா வரமாட்டேன் சார் மன்னிச்சுக்கோங்க”


“என்னப்பா இன்னைக்கு வேஷ்டி கட்டிட்டு வந்திருக்கேன். காலேஜுக்கு ஏதும் விசேஷம் இருக்கா”


“முணுமுணுத்த குரலில் ஒன்னும் இல்ல சார் சும்மா தான்”


“நாங்கள் அந்த காலத்துல வேஷ்டி தான் கட்டிக்கிட்டு இருந்தோம். ஆனால் அந்த வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச பேண்ட் என்னைக்கு வந்துச்சோ, அன்னையிலிருந்து எல்லாமே காலம் மாறிப்போச்சு. நீயாச்சும் வேஷ்டியோட வந்திருக்க அந்த காலத்துல என்னைய பார்த்தது போல இருக்குப்பா! உன்னைய பார்க்கும் போது! சரி உள்ள வா”


ராகவன் பக்கத்தில் அமர்ந்தான் கந்தசாமி. அந்தப் பாடவேளை முடிந்து விட்டது.


ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார்.


“என்னடா கந்தா! இன்னிக்கு வேஷ்டி கட்டிக்கிட்டு வந்திருக்க சொல்லுடா”என்றான் ராகவன்.


“என்னோட பேண்ட் அன்னைக்கு சைக்கிள்ல வீட்டுக்கு போகும்போது சக்கரத்தில்பட்டு கொஞ்சம் முட்டிக்கிட்ட கிழிஞ்சிருச்சுடா! அது கொஞ்சம் பார்க்க அசிங்கமா தெரிஞ்சிச்சு! அதனாலதான் வீட்டில போட்டுட்டேன். அப்பா சந்தைக்கு போனா தையல்கடையில் கொடுத்து தச்சிட்டு வாரேன்னு சொல்லி இருக்காரு. அதனால இன்னிக்கு நீ வேஷ்டியை கட்டிட்டு போடா அப்படின்னு சொன்னாரு அதனால தாண்டா வேஷ்டியோட வந்தேன்”


“அப்படியா? சரிடா” என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் கிழிசலை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.


அடுத்த வகுப்பு ஆரம்பமாகி விட்டது. வகுப்பறையின் உள்ளே தமிழாசிரியர் சுப்பையா நுழைந்தார் வேஷ்டியோடு.


அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று ஆசிரியருக்கு மரியாதை செலுத்தி விட்டு அமர்ந்தனர். ஆசிரியர் சுப்பையா இலக்கண பாடத்தை நடத்த தொடங்கினார்

Post a Comment

0 Comments