தினம் ஒரு கதை - அச்சமுடையோர் எங்கு சென்றாலும் நிம்மதி கிடையாது.

ஒரு காட்டு பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்தது. அந்த சிங்கம் ஒரு நாள் ஒரு மானை வேட்டையாடியது. அதை சாப்பிடும் போது மானின் கொம்பு சிங்கத்தின் வாயில் குத்தியது. சிங்கம் கடுமையாக கோபம் கொண்டது. அதையடுத்து, "இனி என் காட்டில் கொம்புள்ள எந்த மிருகமும் வாழக் கூடாது. கொம்புள்ளவை வேறு காட்டிற்கு செல்லவும்" என அறிவித்து காட்டிற்குள் சென்றது. இதைக் கேட்ட மான், ஆடு, கொம்புள்ள அனைத்தும் வேறு காட்டிற்கு சென்றுவிட்டது. 

ஒருநாள் மாலை நேரத்தில் அக்காட்டில் வாழ்ந்த முயல் நடந்து சென்றுக் கொண்டிருந்தது. முயல் வெயில் பட்டு தன்முன் வந்த தன் நிழலை பார்த்தது. அதன் காதுகள் கொம்பைப் போல் தெரிந்தது. பயந்துப்போன முயல் அந்த காட்டை விட்டு பக்கத்து காட்டிற்கு ஓடிச் சென்றது. புது காட்டிற்கு போன முயல் நடந்ததை ஓர் மான் இடம் கூறியது. அதனைக் கேட்ட மான், "அடப்பாவி அந்த காட்டில் இருந்தால் உனக்கு கொம்பு இருக்கு என பயந்த சிங்கம் உன்னை வேட்டையாடாமல் விட்டிருக்கும். இக்காட்டில் உள்ள சிங்கம் உனக்கு கொம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னை வேட்டையாடியே தீரும்" எனக் கூறியது. இதைக் கேட்ட முயல் மேலும் பயந்துப்போய், "நான் பழைய காட்டிற்கே சென்றுவிடுகிறேன்" என்றது. "உன்னை மாதிரி பயந்தவன் எங்குச் சென்றாலும் நிம்மதியுடன் இருக்கமாட்டான் எனவே இங்கேயே இரு" என மான் கூறியது.

நீதி: அச்சமுடையோர் எங்கு சென்றாலும் நிம்மதி கிடையாது.

Post a Comment

0 Comments