இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர்.இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதுடன், தேர்வுகள் குறித்த பயம் தொற்றிவிடுகிறது. இதனால் மாணவர்கள் விபரீதமான முடிவுகளும் சில நேரங்களில் எடுத்து விடுகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த கோச்சிங் சென்டர்களை சீர்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம், இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை கோச்சிங் சென்டரில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே, 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சகத்தின் துணை செயலர் தேவேந்திர குமார் சர்மா, அனைத்து உயர்கல்வித் துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களில் எந்தவொரு கொள்கையும், ஒழுங்குமுறையுமின்றி கட்டுப்பாடற்ற வகையில் தனியார் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது, மாணவர்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சலை உருவாக்குவது, தற்கொலைக்கு தூண்டுதல் என பல முறைகேடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனவே, நாட்டில் செயல்பட்டு வரும் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு: பயிற்சி மையத்தின் இடவசதிஉள்ளிட்ட முழு விவரங்களுடன் பதிவு செய்தல், வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான சரியான வழிகாட்டுதல்களை வழங்குதல், தகுதியுள்ள பயிற்சியாளர்களை நியமித்தல், நியாயமான கட்டணத்தை வசூலித்தல், கட்டணங்களுக்கு உரிய ரசீதுவழங்குதல், உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், வருகை பதிவேடுகள், கணக்குகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் முறைகேடாக செயல்படும் பயிற்சி மையங்களுக்கு முதல்கட்டமாக ரூ.25 ஆயிரமும், அடுத்தகட்டமாக ரூ.1 லட்சமும் அபாரதம் விதிக்கப்படும். 3-வது முறையாக விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.