தினம் ஒரு கதை - படிப்பு

படிப்பு

“மிஸ்! எனக்கு படிக்க பிடிக்கல. நான் படிப்பை நிறுத்திடுறேன்!” வகுப்பு ஆசிரியையிடம் வருத்தமாய் சொன்னான் குமார்.

“ஏன்?” எனக் கேட்டார் வகுப்பு ஆசிரியை.

“வீட்டுல எங்க அப்பா அடிக்கிறார். ஸ்கூலுக்கு வந்தா நீங்க அடிக்கிறீங்க” என்று பதில் அளித்தான் குமார்.

“அடப்பாவி! இதுக்கெல்லாமா படிப்பை நிறுத்துவ. ஒரு சின்ன அடியை தாங்க முடியாத நீ, எதிர்காலத்தில் பிரச்சனைகளை எப்படி சந்திப்ப? நான் அடிக்கிறது, நீ நல்லா படிச்சி அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும். பெயர், புகழ் வாங்கணும் என்பதற்காக தான்” என்றார் வகுப்பு ஆசிரியை.

“மிஸ், எனக்கு படிப்புல கவனம் வரமாட்டேங்கிது. படிப்பு மேல வெறுப்பா இருக்கு! இனிமே நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்தான்.

வீடு பூட்டி இருந்தது. அவனது அம்மாவின் வருகைக்காக காத்திருந்தான். தளர்ந்த நடையோடு வந்து சேர்ந்தாள் அவனது அம்மா.

“ம்.. நான் மட்டும் அன்னைக்கு ஒழுக்கமா படிச்சிருந்தா, ஏதாவது வேலை வாங்கி, குடும்பத்தை காப்பாத்தி இருப்பேன். படிக்காம இருந்ததால, இன்னைக்கு அஞ்சு வீட்டில, பத்து பாத்திரம் கழுவி பொழப்பை ஓட்டுறேன்.” என்று புலம்பினாள் அம்மா.

அதைக் கேட்ட குமாருக்கு,’சுர்’ரென்று இருந்தது.

“நீ ஏண்டா ஸ்கூலுக்கு போகாம வீட்டுல இருக்குற?”

“வயிற்று வலிம்மா! நாளைக்கு கண்டிப்பா போயிடுவேன்” அவன் மனதில், நன்றாக படிக்க வேண்டும் என்ற உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.

Post a Comment

0 Comments