இடைநிலை (கடைநிலை) ஆசிரியர்களுக்கு எதிராக தொடர்ந்து பிறப்பிக்கப்படும் அரசாணைகள். தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் எதிர்ப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராக தொடர்ந்து பிறப்பிக்கப்படும் அரசாணைகள்.

SSTA, 
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -எதிர்ப்பு


*தொடக்கக் கல்வித் துறையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க  ஆசிரியர் பயிற்சி முடித்து இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த நிலையில் 2003 ம் ஆண்டு 6,7,8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*

*அதன் பின்பு இடைநிலை ஆசிரியர் நியமனமும் மிக சொற்பமாக மாறிவிட்டது.இது போன்ற சூழ்நிலையில் ஐந்தாவது ஊதிய குழு வரை மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.*

*2009- ம் ஆண்டு ஆறாவது ஊதிய குழு அரசாணை-234 ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ,முதுகலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வழங்காமல், உடன் பணியாற்றும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான "சமவேலைக்கு" "சம ஊதியமும்" வழங்காமல் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் அநீதி இழைக்கப்பட்டது.*


*இதுவரை இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும் ,பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்று வந்த சூழ்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை-243 நாள் 21.12.2023 இனி  நேரடியாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயர்வு பெற  முடியும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. இது இடைநிலை ஆசிரியர்களிடம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தும் தொடர் நடவடிக்கைகளாகவே கருத வேண்டியது உள்ளது.*

 *ஒருபுறம் இழந்த ஊதியத்திற்காக இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக போராடிவரும் நிலையில் மற்றொருபுறம் பதவி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது.இதனால் முன்பை விட மிக  தீவிரமான  போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது  என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*தி.மு.க தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட "சமவேலைக்கு" "சம ஊதியத்தை" நிறைவேற்ற  கடந்த 01.01.2023 அன்று  தமிழக முதல்வர் அவர்களால் அமைக்கப்பட்ட மூன்று நபர்கள் குழு  அறிக்கை ஓர் ஆண்டுகளாகியும் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி சமர்ப்பிக்கப்படாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்துவரும் சூழ்நிலையில், பதவி உயர்வு குறித்தும் மாநில அளவிலான முன்னுரிமை குறித்தும் எந்த ஒரு தொடக்கக்கல்வி இயக்கத்தின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக  பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை ஏற்புடையது அல்ல.*

*இந்நாள் வரை கடைபிடிக்கப்பட்ட ஒன்றிய மாறுதலும் மறுக்கப்பட்டு மாநில அளவிலான பதவி உயர்வு பின்பற்ற அரசாணை வெளியிடும்போது, அதில் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்பையும் தட்டிப் பறிப்பது வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சுவது போன்று உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் இனத்தை அழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளாகவே இதனை கருதுகிறோம்,எனவே தமிழக அரசு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்குவோம் என்ற தேர்தல் அறிக்கையை இனியும் காலதாமத படுத்தாமல் உடனடியாக நிறைவேற்றி, தற்போது வெளியிடப்பட்ட  அரசாணை-243 ஐ மறுபரிசீலனை செய்து முன்பு இருந்ததைப் போலவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமாய் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பொதுச்செயலாளர் 
SSTA

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்தி 

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை என்ற அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆகிய பணியிடங்களை மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்ற அரசாணை 243ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 2022 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு, மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது குறித்த கருத்துரு உருவாக்க குழு அமைக்கப்பட்டது. அப்போதே, இது தேவையற்ற செயல். இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுவரை இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமை மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பிராந்திய மொழி பயன்பாடு இவைகளை காரணமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் கற்பித்தலை புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த பகுதி பேச்சு மொழியை கொண்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஒன்றிய அளவிலான அலகாகவே கருதப்பட்டு வந்தது. எனவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான அலகாக மாற்றி முன்னுரிமை பட்டியல் தயார் செய்ய வேண்டாம் என ஆட்சேபனை கருத்தை பதிவு செய்து 11.10.2023 தேதியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது இயக்குநர் பெருமக்கள், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி புதிய அணுகுமுறை திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரியர்களின் கருத்தைக் கேட்டு எவரும் பாதிப்படையாத வகையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த கருத்து கேட்பும் நடைபெறவில்லை. மாறாக தாமாக முன்வந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வழங்கப்பட்ட ஆட்சேபனை கடிதத்தையும் கருத்தில் கொள்ளாமல் தற்போது அரசாணை 243ஐ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலை, கூடுதலாக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்தல் நிறுத்தி வைப்பு, எமிஸ் வலைதளத்தில் புள்ளி விவரங்கள் பதிவேற்றம் செய்து கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல் என அடுக்கடுக்கான துயரங்களை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக இந்த அரசாணை வெளிவந்துள்ளது. உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தீர்வு காண்பதாக கூறி அதற்கு எதிரான அரசாணை வெளியிட்டது போல், தற்போதும் ஆசிரியர்கள் பாதிப்பு அடையாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கருத்து தெரிவித்து விட்டு, அதற்கு வேறு எதிர்ப்பாக அரசாணை வெளியிடுவது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து பழிவாங்கும் போக்கு மாற்றப்பட வேண்டும். உடனடியாக அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருக்கும் நிலையில், ஆசிரியர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் அழைத்து பேசி எவரும் பாதிப்புடையாத வகையில் திட்டங்களை உருவாக்கி அதனை நீதிமன்றங்களில் தெரிவிக்கலாம். ஆசிரியர்களின் மனதை வெளிப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்படும் இந்தக் கருத்தை அரசு புறந்தள்ள நினைத்தால் கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்புடன் 
பொதுச்செயலாளர், TESTF இணைப் பொதுச்செயலாளர், AIPTF பொதுச்செயலாளர், WTTC

Post a Comment

0 Comments