தினம் ஒரு கதை - மறதி

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் செல்வதற்கு, வீட்டை விட்டு திரும்பி சிறிது தூரம் நடந்த பிறகு, தான் ஏதோ ஒன்றை மறந்த நினைவு வந்தது, அறுபது வயதைக் கடந்த சிவசாமிக்கு.

அவர் யோசித்தபடியே திரும்பி நடக்க ஏ.டி.எம் கார்டு எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

“காமாட்சி! ஏ.டி.எம் கார்டு எடுக்க மறந்துட்டேன் எடுத்துட்டு வா”

“பணம் எடுக்க போறவருக்கு ஏ.டி.எம் கார்டு எடுத்துட்டுப் போகத் தெரியாதா?” சிடுசிடுத்தபடியே சொன்னாள் காமாட்சி.

“இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற? வயசாயிட்டாலே ஞாபக மறதி வர்றது சகஜம் தானே! இதை போய் பெருசு படுத்துற? தப்பு பண்ற காமாட்சி”

“எது? நான் தப்பு பண்றேனா? அப்போ நீங்க தப்பு பண்றதில்ல. இப்போ என்ன சொன்னீங்க? வயசாயிட்டாலே ஞாபக மறதி வர்றது சகஜம் தானேன்னு. அது மாதிரி தாங்க எனக்கும் வயசாயிடுச்சு.”

“ஞாபக மறதியால, நான் காலையில சட்னிக்கு உப்பு போட மறந்துட்டேன். அதுக்கு நீங்க என்ன குதி குதிச்சீங்க; நினைச்சு பாருங்க!”

அவருக்கு ‘சுருக்’கென்று உறைத்தது. தலை குனிந்தபடியே, கார்டை வாங்கிக் கொண்டு ‘இனிமே எதுக்கும் திட்டக் கூடாது’ மனதுக்குள் நினைத்தபடி ஏ.டி.எம் நோக்கி நடந்தார் சிவசாமி.

Post a Comment

0 Comments