தினம் ஒரு கதை - வீண் சந்தேகங்களை விலக்கி நம்பிக்கை வையுங்கள்

#நீதிக்கதை

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்க, படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அவரின் அரசவை ஜோசியர், 

“மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகி விடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டதே என தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா..?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்களுக்கு மரணம் என்னை நெருங்காது.." என்றார் ஜோசியர்.

தெனாலிராமன் சட்டென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா..?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்..” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்..! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்..” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயரும் ஆற்றைக் கடந்து சென்று எதிரியை வெற்றி கொண்டார்.

#நீங்கள்_தீர்மானமாக_இருந்தால், #கோள்களால்_உங்களை_எதுவும்_செய்ய முடியாது.

#வீண்_சந்தேகங்களை_விலக்கி, உங்கள் மீது #நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் #வெற்றிக்கனி...!

Post a Comment

0 Comments