தினம் ஒரு கதை - துன்பம் வந்தாலும். அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம்

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான். அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான்.

அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" என்று கேட்டுவிட்டு தன் கழுதையின்மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றான். ஆனால் வழியில் பெரிய மழை பெய்து உப்பு முழுவதும் கரைந்து போனது.
"உன்னை அவ்வளவு வேண்டியும், ஏழையான என் வயிற்றில் இப்படி அடித்துவிட்டாயே" என இறைவனைத் திட்டினான்.

பின் மழை சற்றே நிற்க ஊர் திரும்பினான்.வழியில் சில திருடர்கள். வியாபாரிகள் தன் பொருளை சந்தையில் விற்றுவிட்டு பணத்துடன் வருவார்கள் என எண்ணி வெடி மருந்து கொண்டு வெடிக்கும் துப்பாக்கியுடன் நின்றார்கள்.

வியாபாரி திரும்பி வரும்போது வெடிமருந்து மழையால் நனைந்திருந்ததால் துப்பாக்கி வெடிக்கவில்லை. உடனே திருடர்கள் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போதுதான் உப்பு வியாபாரி நினைத்தான், "மழை வந்ததால் உப்பு தான் போச்சு. மழை வராதிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும். ஆண்டவன் கருணையே கருணை. அது புரியாமல் ஆண்டவனை திட்டினேனே" என உருகினான்.

நமக்கு எந்த ஒரு துன்பம் வந்தாலும். அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்பதை அறிய வேண்டும். அதுபோல் துன்பம் விலகவும் ஒரு வழி இருக்கும் என்றும் உணரவேண்டும்.

Post a Comment

0 Comments