நாட்டிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ஐடி', என்னும் தனித்துவ அடையாளத்துக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் பணி, பள்ளி சார்பில் இன்று(அக்.16) தொடங்கி 3 தினங்களுக்கு நடைபெற உள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ஐடி', என்னும் தனித்துவ அடையாளத்துக்கான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. புதிய கல்வி கொள்கையின் கீழான இந்த ஏற்பாட்டில், நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், 'ஒரே நாடு ஒரே அடையாள அட்டை' திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள்.
இந்த தனிப்பட்ட அடையாளமானது ’தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு’(Automated Permanent Academic Account Registry’ - APAAR) என்பதாக தொகுக்கப்பட இருக்கிறது. நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தனித்துவமான அடையாளத்துக்காக ஆதார் அடையாள அட்டை உள்ளது போன்று, அனைத்து மாணவர்களுக்குமான அடையாளச் சான்றாக இனி ’அபார்’ அமையும். இந்த தனிப்பட்ட அடையாள எண் எந்த வகையிலும் மாணவர்களின் ஆதார் ஐடிக்கு மாற்று கிடையாது; ஆனால் கூடுதல் அம்சமாக அறியப்படும்.
மழலையர் கல்வியில் தொடங்கி உயர்கல்வி வாய்ப்புகள் வரை ஒரே அடையாளத்தில் அனைத்து மாணவர்களும் இனி அறியப்படுவார்கள். ஒரு மாணவரின் ஒட்டுமொத்த கல்விப் பயணத்தையும், அதன் குறைபாடுகள், அவை நிவர்த்தி செய்யப்பட்டதன் வழிமுறைகள் மற்றும் சாதனைகள் கண்காணித்து பதிவு செய்யும். கல்வி மட்டுமன்றி விளையாட்டு மற்றும் கலை செயல்பாடுகள், மாணவரின் ஆர்வங்கள், தனித்துவ திறமைகள், உடல்நலம் சார்ந்த தரவுகள் உள்ளிட்டவையும் இந்த கணக்கின் கீழ் சேகரிக்கப்படும்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இதே போன்று மாணவர்களின் சகல தரவுகளும் சேகரிக்கப்பட்டு, மாணவரின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் தேசிய அளவில் அனைத்து மாணவர்களையும் ஒரே குடையின் கீழ் தனித்துவ ஐடியில் தொகுத்து பராமரிக்க இருக்கிறது.
ஆதார் அடையாள அட்டை போன்றே அபார் ஐடியும் தனியுரிமை சார்ந்தது என்பதால், மாணவர்களின் பெற்றோரிடம் பேசி, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஒப்புதலைப் பெறுமாறு பள்ளிகளை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான பணிகள் அக்.16-18 ஆகிய தினங்களில், அந்தந்த பள்ளிகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.