சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை, சமூக, அரசியல், பொருளாதார நீதி போன்றவை பிணைந்திருக்க வேண்டும். அறநெறிகளையும், விழுமியங்களையும் கல்வியின் மூலமே பயிற்றுவிக்க முடியும். ஆனால், நமது கல்வி அமைப்பில் இந்த நோக்கங்கள் படிப்படியாக தேய்ந்து வருகின்றன.
அனைத்து துறைகளிலுமான தனியாரின் வளர்ச்சியின் விளைவே அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், தனியார் பள்ளிகள் பெருகுவதற்குமான காரணம்" என்கிறார் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், திருப்பூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியருமான சு.மூர்த்தி. ஜனநாயகத்தின் விளை நிலங்களான அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சற்றும் யோசிக்காமல் பதில் அளிக்கிறார் சு.மூர்த்தி.
கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் எந்த அளவில் நடைமுறையில் உள்ளது?
2009-ல் குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 6 முதல் 14 வரையுள்ள குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தனியார் பள்ளிகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. மழலையர் வகுப்புக்கே ஒன்றிரண்டு லட்சங்கள் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் காகிதச் சட்டமாகவே உள்ளது. மதிப்பெண் மட்டுமே படிப்புக்கான அளவீடாக பார்க்கும் சூழலில், தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கருத்து நிலைபெற்றுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு என்றிருந்த நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகள் பிளஸ் 1
வகுப்புப் பாடங்களே அவசியமில்லை எனக் கைவிடப்பட்டது எவ்வளவு பெரிய அபத்தம்?
அரசுப் பள்ளிகளோ, நிர்வாகச் சீர்கேடு, வசதிக் குறைபாடு, மாணவர் எண்ணிக்கை குறைவு என தொடர் தாக்குதல்களில் அகப்பட்டு,ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் 812 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மாணவர்கள் பொதுத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்? இதுபோன்ற காரணங்களே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு பெற்றோரை உள்ளாக்குகின்றன.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?
நிச்சயமாக இல்லை. தமிழ் வழியில் சேரும் மாணவர்கள் சிலர், ஆங்கில வழிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வீட்டிலும், வெளியிலும் பயன்படுத்தாத ஆங்கில மொழி மூலம் கற்பிப்பதால், புரிந்துகொள்ளுதல் இல்லாமல், மனப்பாடம் மட்டுமே நிகழ்கிறது. புதிதாக ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டால், சுற்றியுள்ள 10, 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும்.
ஆனால், தனியார் பள்ளிகளோ, 20, 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வந்து விடுகின்றனர். கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து, அரசுப்பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை காக்க என்ன வழிகள் உள்ளன?
அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமவாய்ப்பிலான கல்வியை, அவரவர் தாய்மொழியில் கட்டணமின்றி கிடைக்கச் செய்வதே அரசின் கடமை என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் உணரவேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் 12 % வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் பாதிகூட கல்விக்கு ஒதுக்கப்படுவதில்லை. எனவே, நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, நவோதயாபோல, மாவட்டந்தோறும் மாதிரிப் பள்ளிகளை அமைப்பதால் மட்டும் பயனில்லை. அரசுப் பள்ளிகள் அனைத்துமே மாதிரிப் பள்ளி நிலைக்கு உயர வேண்டும்.
- சு.மூர்த்தி.
தாய் மொழிக் கல்வி, ஆளுமைகளை உருவாக்குமா?
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, கல்லூரிபடிப்பை மட்டுமே ஆங்கில வழியில் படிக்கும் நிலைதான் இருந்தது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகப் படித்த பலர், அனைத்து துறைகளிலும் பெரிய ஆளுமைகளாக உருவாகினர்.அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் தமிழ் வழிக் கல்வி மூலம் படித்தவர்களே. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கல்வித் துறைதான்.
அரசுப் பள்ளிகள் குறைவதற்கு வேறு காரணங்கள் என்ன?
அதிகாரம் உள்ளவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காததே சீர்கேட்டுக்கு வழியமைத்தது. ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமென 2015-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமத்துவம், சமூக நீதி பேசுவோரும், அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று அறிக்கை விடுவோரும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் போராட வேண்டும்.
10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளிகளாக இருந்தாலும் மூடக்கூடாது என்று சிலர் கோரிக்கை வைக்கின்றனர். இது, சரியான நிர்வாக முறையல்ல. அரசு செலவழிக்கும் பணம், மக்களின் வரிப்பணமே. எனவே, குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முழு நேர ஆசிரியர்கள், முழுநேரத் துப்புரவுப் பணியாளர் மற்றும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றுடன், மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமையும் வகையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை இணைப்பது சரியான தீர்வாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த காலகட்டத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் குழந்தைகளுக்கு அரசின் பொறுப்பில் வாகன வசதி செய்துதர வேண்டும். வளர்ந்த முன்னேறிய நாடுகளில் பின்பற்றப்படும் அருகாமைப் பள்ளி முறை மற்றும் பொதுப் பள்ளி முறைகளைப் பின்பற்றுவதே அனைத்துச் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும். தனியார் பள்ளிகளை இந்த முறைக்குள் கொண்டுவர புதிய கல்விச் சட்டம் இயற்ற வேண்டும்.
- இரா.கார்த்திகேயன்
ஆசிரியர்கள் சங்கமம்
சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.