எழுதும்போது ஒற்றுப் பிழை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தெரிந்ததுபோல் தோன்றினாலும் எழுதும்போது நம்மையறியாமல் ஒரு பிழை தோன்றிவிடும். ஒற்று இட வேண்டிய இடாமல் விட்டுவிடுவோம். வேண்டாத இடத்தில் ஒற்றெழுத்து வந்துவிடும். ஒற்றுப் பிழை, வலிமிகுதல் பிழை, சந்திப்பிழை, சொற்களின் ஈற்றில் க்ச்த்ப் போடுவதில் பிழை என்று பலவாறும் அழைக்கப்படுவது இதுதான். இதற்குச் சிலவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் போதும். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதலாம். அவற்றைப் பார்ப்போம் !
1). அந்த இந்த எந்த ஆகிய சுட்டுச் சொற்களை அடுத்து ஒற்று இடவேண்டும். அந்தக் காடு, இந்தச் செய்தி, எந்தப் பாட்டு.
2). அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடச்சுட்டுகளை அடுத்தும் கட்டாயம் வல்லொற்று வரும். அங்குச் சென்றான், இங்குக் கிடைக்கும், எங்குப் போனாய் ?
3). ஐ என்கின்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் உறுதியாக ஒற்று மிகும். அன்பைத் தேடி, உண்மையைச் சொல், படித்ததைக் கூறு.
4). கு என்கின்ற நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் கட்டாயமாக ஒற்று மிகும். காட்டுக்குச் சென்றான், வந்தவர்க்குக் கிடைத்தது. பாட்டுக்குப் பாட்டு.
6). அஃறிணைப் பெயரை அடுத்து அதற்கு உடைமையான இன்னொரு பெயர்ச்சொல் வந்தால் கட்டாயம் வலிமிகும். குருவிக் கூடு, மாட்டுக்கொம்பு.
7). இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து ஒரே பொருளைக் குறிக்குமானால் அங்கே வலிமிகும். அதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பார்கள். வாழைப்பழம், சிட்டுக்குருவி, வாடைக்காற்று.
8). ஊர்ப்பெயரை அடுத்து எந்தச் சொல் வந்தாலும் கட்டாயம் வல்லினமெய்யைப் போட்டுவிட வேண்டும். சென்னைக் கல்லூரி, மதுரைத் தமிழ்ச்சங்கம், நெல்லைத் திருவிழா, கோவூர்க்கிழார்.
9). இரண்டு பெயர்ச்சொற்களில் முதலாவது உவமை நோக்கில் வந்தால் கட்டாயம் ஒற்று வரும். இதனை உவமைத்தொகை என்பார்கள். தாமரைக்கண், மலைத்தோள்.
10). ஒரு பெயர்ச்சொல் ஓரெழுத்தால் மட்டுமே ஆகியிருந்தால் வல்லொற்று தோன்றும். பூக்காடு, தீப்பிழம்பு.
11). டு, று என்று முடியும் பெயர்ச்சொற்கள் இன்னொரு பெயர்ச்சொல்லோடு இரட்டித்து வரும் இடங்களில் கட்டாயம் வலிமிகும். வயிற்றுப்பசி, காட்டுத்தடம், ஆற்றுத்தண்ணீர்.
12). ம் என்று முடியும் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ம் மறைந்து ஒற்று தோன்றும். மாவட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாநிலக் குழு.
13). இரண்டு வினைச்சொற்கள் தொடராக வரும்போது பெரும்பாலும் வலிமிகும். ஆடிச் சென்றான், அள்ளிக் கொடுத்தான், எடுத்துச் சென்றாள், முடித்துவிடு (மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் விதிவிலக்கு – எழுந்து சென்றான், செய்து கொடுத்தான்)
14). ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குக் கட்டாயம் வலிமிகும். ஓடாக் குதிரை, செல்லாக் காசு, வாராக்கடன்.
15). ஒரு பொருளின் அளவு, நிறம், வடிவம் சார்ந்த பண்புப் பெயர்களோடு சேர்த்து அப்பொருளைச் சொன்னால் கட்டாயம் வலிமிகும் –
நெட்டைத்தென்னை, வெள்ளைச் சட்டை, வட்டத்தொட்டி.
இவை தொடக்கநிலை உதவிக் குறிப்புகள். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் ஒற்றுப் பிழைகளைத் தவிர்த்துவிடலாம்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.